பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

173


தங்கலாம் என முதலில் ஆய்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர் போலும்! நம் நாட்டிலுங்கூட அந்த அடிப்படையிலேதான் கூடுவிட்டுக் கூடுபாயும் கதைகளும் பிறவும் வழக்கத்தில் இருந்தன. இறந்த ஓர் உடலில், மற்றோர் உடலில் உள்ள உயிர் புகுந்துகொள்ளும் வழக்கத்தைக் கதைகளில் படிக்கின்றோம். அவ்வாறாய் இறந்த ஓர் உடலில் உயிர் புகுவதே உயிர்த்தோற்றம் என்று முதல் முதல் இத்துறையில் ஆராய்ச்சி செய்த உயிர்நூற் புலவர்கள் கருதியிருந்திருப்பார்கள். ஆயினும், அது தவறு என்பது பின்னர் விளக்கப்பட்டது. உயிர் ஒரு புத்துடலில் சேர்ந்தே வளர்ச்சி பெறுகின்றது என்பதே ஆய்ந்து முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த உயிர்த்தோற்றம் எவ்வாறு அமைந்தது?

தமிழ்நாட்டில் இவ்வுயிர்த்தோற்ற வளர்ச்சியை நன்கு அறிந்துள்ளார்கள் அறிஞர்கள். நிலத்தோற்றத்தையும் அமைப்பையும் மேல்நாட்டு மக்களெல்லாம் ஆராயத் தொடங்கப் பல நூற்றாண்டுகட்கு முன்பே, இங்குள்ள இலக்கியங்கள் எடுத்துக்காட்டுவது போன்று, உயிரின் தோற்ற வளர்ச்சியையும் ஒருவாறு அவை காட்டத் தவறவில்லை. மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தம் உயிர்மேல் சார்த்திக் கூறும் அவ்வுயிர்த் தன்மையைப் பொதுவான உயிர் வளர்ச்சியைக் காட்டுவதாகக் கொள்வர் அறிஞர். உயிர் எப்படி வளர்ந்தது என்பதை,

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.’

என்று அவர் சொல்லும்போது, உயிர், இத்துணைப் பிறவிகளிலும் புகுந்து புகுந்து வளர்ந்தது என்று எண்ணுதல் இயற்கை. மாணிக்கவாசகர் தம் ஒரே உயிர் இத்துணை மாற்றங்கள் பெற்று வந்ததைக் கூறுகிறார் என்பர் சிலர், எனினும்,