பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

கவிதையும் வாழ்க்கையும்


மட்டும் உயிர் வாழ்கின்றன. அவ்வாறு வாழ்வனவற்றுள் சேக்கிழார் பாடிய"பெரிய புராணமும், கம்பரது இராமாயணமும் முதலிடம் பெறத்தக்கவை. இவற்றைப்பற்றிப் பின்னர் ஆராய்வோம். இங்கு மூன்று பெருங்காப்பியங்கள் மக்கள் வாழ்வோடு பிணைந்திருப்பதைக் காண்போம்.

காப்பியங்களுள் சிறந்ததாகிய சிலப்பதிகாரம் பெரு வாழ்வு நூலாகவே அமைகின்றது. தனி மனிதனாகிய கோவலனையும் அவன் மனைவியாகிய கண்ணகியையும் சுற்றி வருகின்றது இக்கதை. இதை வெறுங் கற்பனைக் கதையென்று கொள்ள முடியாது. சில சம்பவங்கள் புலவர் வாக்கால் உயர்வு நவிற்சியாகக் கூறப்பட்டிருப்பதாகக் கொள்ளினும், கதைப் போக்கு வாழ்வில் இடம் பெறத்தக்கதே. வணிகர் குலத்தே நல்ல செல்வக் குடும்பத்திலே பிறந்த கோவலன். தன் தகுதிக்கு ஏற்ற மங்கை நல்லாள் கண்ணகியை மணந்து, இல்லறம் நடத்துகின்றன். அவ்வில்லற வாழ்வின் ஏற்றத்தை முதலில் இளங்கோவடிகள் காட்டித்தான் மேலே செல்லுகின்றார். 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை,’ என்ற வள்ளுவர் குறள் நெறிக்கு ஏற்ப, கோவலன் அவ்வில்லற வாழ்வையே மேற்கொண்டான். கோவலன் வாழ்வை நன்கு புரிந்து கொள்ளாத சிலர், அவன் கண்ணகியோடு வாழவே இல்லை என்றும், மணமான அன்றே பரத்தை வீட்டை நாடிச் சென்றான் என்றும் கூறுவர். அது சிறிதும் பொருந்தாததாகும். அவன் கண்ணகிபால் கொண்ட காதற் சிறப்பினையும், அவள் தோற்றத்தையும் சிறப்பையும் கண்டும், அறிந்தும், உண்டும் மகிழ்ந்து போற்றிய விதத்தினையும் மனையறம்படுத்த காதையில் இளங்கோவடிகள் நன்கு எடுத்துக் காட்டுகின்றார். அவள் வாய்மொழியைக் கோவலன்,

‘குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு மென்கிளி வருந்தின!’ (நனையறம். 58-59)

என்று போற்றும்போது, யார்தாம் அவர்தம் வாழ்வை வியவா திருக்க முடியும்? அவன் அவளைப் போற்றிய சிறப்பையெல்லாம் தொகுத்து,