பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

363


ளனர். எனினும், நூலின் தலைவனாகிய சீவகன் எண்மரை மணம் செய்துகொண்டு, நுகரும் காம விளையாடல்களையெல்லாம் விளக்கும்போது, இது ஒரு காம நூலோ! எனத் தோன்றும். அதைப் போன்றே போர் முதலியவற்றை விளக்கியும் நன்கு பாராட்டுகின்றார். மக்கள் வாழ்வின் தேவைகளையெல்லாம் அவர் ஆங்காங்குக் காட்டி, அந்த வாழ்வைச் செம்மையாக்கும் முறைகளையும் காட்டுகின்றார். திருக்குறள் போன்ற அற நூல்களின் சாரங்களையெல்லாம் வடித்தெடுத்து, பல பாத்திரங்கள் வாயிலாக அவர் விளக்கும் போது இஃது ஒர் அறநூலோ!' என்று ஐயமுறுமாறு நம்மை அழைத்துச் செல்கின்றது. இத்தகைய ஒரு சிறந்த காவியம் பலராலும் ஒருசேரப் போற்றப்படாததற்குக் காரணம், அது துறவை வற்புறுத்துவதுடன், ஒரு சமயம் பற்றியே விளக்கங்கள் கொண்டுள்ளதேயாம். சமயத்துறையில் புகாத ஒரு காவியமாக அந்நூல் இருந்திருப்பின், அதுவே சிறந்த காப்பியமாய் வாழும் என்பதில் ஐயமில்லை. எனினும், அந்நூல் சமயக் காழ்ப்பை வளர்க்காமையே அதை இந்த அளவுக்கு வாழ வைக்கிறது எனலாம்.

சிந்தாமணியில் அகம் புறம் இரண்டுமே பேசப்படுகின்றன. அகவாழ்வைக் கூறுமுன், நாடு எவ்வாறு சிறக்க வேண்டு மென்பதைத் தேவர் விளக்குகின்றார், அந்த நாட்டு நலம் காட்டும் நெறியிலேயே அக வாழ்வையும் உடன் காட்டுகின்றார்.

'கண்எனக் குவளையைக் கட்டல் ஓம்பினார்;
வண்ணவாண் முகமென மரையின் உட்புகார்;
பண்எழுத்து இயல்படப் பரப்பி இட்டனர்;
தண்இயல் உழவர்தம் தன்மை இன்னதே’ (51)

என்று அவர் வயல் உழவர்தம் வாழ்க்கை முறையிலேயே அகவாழ்வை அழகுபடுத்திக் காட்டும் திறன் அறிந்து மகிழத்தக்கதன்றோ! இது போன்றே புற வாழ்வின் நிலையாமையே அக வாழ்வின் இறுதி என்பதைச் சச்சந்தன்