பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

கவிதையும் வாழ்க்கையும்



வாக்கில் வைத்துக் காட்டுகிறார். தம்மை மறந்து, தரணியை மறந்து, இன்ப வாழ்விலேயே திளைத்து நின்ற சச்சந்தனும் விசையையும் கட்டியங்காரன் சூழ்ச்சியை அறியாராய் மயங்கி நின்று. பின் அவன் இவர்களை வெல்லும் திறம் பெற்றதை உணர்கின்றார்கள். உணர்ந்து என்ன செய்ய முடியும்? நிலையாமையை எண்ணி ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழியில்லை. அதைச் சச்சந்தன் வாயிலாகவே காட்டுகின்றார் தேவர்.

'சாதலும் பிறத்தல் தானும்
தன்வினைப் பயத்த வாகும்:
ஆதலும் அழிவும் எல்லாம்
அவைபொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பிரிவும் எல்லாம்
நுண்ணுணர் வின்மை யன்றே?
பேதை! நீ பெரிதும் பொல்லாய்
பெய்வளைத் தோளி!'

(269)

என்று சச்சந்தன் விரிவாகக் கூறுகிறான். அதுவே உலகத்தை நோக்கி நிலையாமையை வற்புறுத்துவதாய் அமைகின்றது. இந்த இறுதி நிலைக்குமுன், அவன் கெடாது வாழலாம் என்று அமைச்சர் வாயிலாகப் பலப்பல அறிவுரைகளைக் கூறுகின்றார் தேவர். அவை அவனுக்கு மட்டும் தனிப்பட்டனவாக அமையாது, தரணி வாழ் மக்களுக்கே இன்றியமையாது வேண்டப்படும் அறவாயில்களாய் அமைகின்றன. தமிழ்நாட்டு வாழ்க்கை முறையைக் கூறிய தொல்காப்பியர்.

'காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.'

(தொல்.பொருள்:190)

எனக் காட்டுகின்றார். இந்த அடிப்படையிலேயே சிந்தாமணி செல்கிறது என்பது ஓரளவு பொருத்தமுடையதே யாகும்.