பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய இலக்கியங்கள்

371


செல்வதே சமய வாழ்வு. ‘எவ்வுயிரும் பராபரன் சன்னிதிய தாகும்,’ என்று இறைவனைப் பாடும் அடியவர்கள், உயிர் எல்லாம் கடவுளின் தோற்றமென்றும், அதனல் எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதிருப்பதே சமய வாழ்வு என்றும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். ‘அன்பே கடவுள்.’ என்ற தொடரும் அதனல் எழுந்ததன்றோ? யார் யார் அன்பு காட்டுகிறார்களோ, அவர்கள் சமயவாழ்வினை அல்லது கடவுள் நெறியினப் போற்றி வளர்ப்பவராகின்றார்கள். அவர்கள் பாடிய பாடல்கள், காணாத கடவுட் காட்சியை மக்களோடு பிணைக்கும் அன்புப் பாடல்களேயாகும். திருமூலர் தாம் கண்ட கடவுளாகிய சிவனைப்பற்றி,

'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்;
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்:
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே.’

என்று தமது திருமந்திரத்தில் கூறுகின்ருர். எனவே, அவர் சமயம் அன்பின் வழிப்பட்ட ஒன்று என்பது நன்கு விளங்குகின்றதன்றோ! கடவுளை மனித வாழ்வோடு பிணைக்காது. எங்கோ தனித்து வைக்க விரும்பும் சமயங்களெல்லாம் நாட்டில் வாழா. இவ்வாறு கடவுள் நெறியை மக்கள் வாழ்வோடு பிணைத்து, அவர் வாழ்வுக்கு ஏற்றதே சமயம் என்ற கொள்கையில் நிற்பனவே என்றென்றும் வாழ்வனவாகும். மக்களுக்குத் தொண்டு செய்வதுதான் கடவுள் நெறி என்பதை எல்லாச் சமயங்களும் ஒரு மனமாய் ஏற்றுக் கொள்கின்றன.

‘நடமாடும் கோயில் கம்பர்க்கொன் றீயில்
படமாடும் கோயில் பரமர்க்குஅங்கு ஆகும்.'

என்ற வாக்கு இந்த உண்மையை வலியுறுத்துவதாகும். உண்மையை விளக்க ஒவ்வொரு சமயத்திலும் எத்தனையோ கதைகள் உள்ளன. அவைபற்றிக் கவிதைகளும் காவியங்களும் நாட்டில் உள்ளன. சமயநெறி என்பது மக்கள் வாழ்வோடு தொடர்பு படாத ஒன்று என்று யாரும் நினைக்கலாகாது