பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

கவிதையும் வாழ்க்கையும்


என்பதை, அவ்வப்போது அடியவர் பலர் கவிதைகள் மூலம் காட்டிக்கொண்டு வருகின்றனர். சமயப் பாடல் என்றால் ஆண்டவனைப் போற்றும் அளவிலேயே அமைந்த ஒன்று என்ற எண்ணம் கூடாது என்பதையும் கவிஞர் உணர்ந்து தத்தம் பாடல்களில் வெளியிட்டுள்ளனர். ஆண்டவனைப் போற்றுவதே மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்காகத்தான் என்பதை அவர்கள் பலப்பல பாடல்களில் பாடியுள்ளார்கள். அண்மையில் வாழ்ந்து மறைந்த இராமலிங்க அடிகளாரின் சமரசப் பாடல்கள் இந்த உண்மையை விளக்குகின்றன. வெறுங்கோயில் வழிபாடும், பூவும் நீரும் கொண்டுசெய்யும் பூசனையுமே கடவுள் நெறி என்று எந்த மெய்ச்சமயத் தலைவரும் கூறி முடிவு கட்டி அமையாது, அதற்கு நேர்மாருக, உலக மக்களிடத்து அன்பு செலுத்துவதும், மனமாசு அற்று வாழ்வதுமே கடவுள் நெறி என்று பாடியுள்ளார்கள். திருவள்ளுவர் கூறியபடி, எத்துணை ஆரவாரம் இருப்பினும், மனம் மாசுற்ற தாய் இருப்பின், அவர்தம் வாழ்வால் பயனில்லை என்பதை அப்பர், சமய நெறியில்,

‘குறிக ளு ம்அடையாளமும் கோயிலும்
நெறிக ளும்அவர் நின்றதோர் நீர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஒதினும்
பொறியி லீர் மனம் என்கொல் புகாததே?’

என்று எடுத்துக் காட்டுகின்றனர். "மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன்; ஆகுல நீர பிற,’ என்னும் வள்ளுவர் வாக்கை இது நினைப்பூட்டுகின்றதன்றோ! இவ்வாறே சமயம் வளர்த்த பெரியோர்கள் மக்கள் வாழ்வை மனத்திற்கொண்டு, மற்றவருக்கு உதவி, மனமாசு நீங்கி வாழ வேண்டுவதே சமய அடிப்படையின் நோக்கம் என்று பாடியுள்ளார்கள்.

வாழ்வில் எல்லாரும் இன்புற்றிருக்கும் வாழ்வைத்தான் அறிஞர் விரும்புவர். அந்த விருப்பதைத் தாயுமானவர்,


‘எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறென்று அறியேன் பராபரமே!’