பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் சேக்கிழாரும்

379



தமிழ்நாட்டு அண்டையில் வாழும், தமிழின் சேய் மொழிகளே என்று கூறக்கூடியவாகிய நலம் வாய்ந்த கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் இன்று தாய்மொழியிலிருந்து நெடுந்துாரம் பிரிந்து சென்றுவிட்டன. அதற்குக் காரணம், அவற்றில் வடமொழி ஆட்சி அதிகமாக உள்ளமையேயாம். எத்தனையோ சொற்களும், அமைப்புக்களும்—ஏன்?—இலக்கண வரம்புகளுங்கூட வடமொழியில் உள்ளன போன்று அம்மொழிகளில் இடம்பெற்றுள்ளன. அதனால், அவை அனைத்தும் வடமொழித் தொடர்பை வளர்த்துக் கொண்டன. எனினும், தமிழ்மொழி அந்த அளவுக்குச் செல்லவில்லை. ஓரளவு வடமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டாலும், அவற்றிற்கும் வரம்பும் வழியும் அமைத்தே ஏற்றுக்கொண்டது. எனவே, வேண்டிய காலத்தில் அவற்றை நீக்கவும், தேவையாயின் கொள்ளவுமான வழியில் தமிழ்மொழி அமைந்துள்ளது.

எனினும், தமிழ்நாட்டு இலக்கிய வாழ்வில் பல வடமொழி நூல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் தலையாயது கம்பரது இராமாயணம். எத்தனையோ வடமொழிக் காவியங்களும் புராணங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றை மொழி பெயர்ப்பதையே ஒரு பெரும்பேறு என்று எண்ணிக் கொண்டு வாழ்ந்தவரும் இருந்தனர் அக்காலத்தில். எனினும், அத்துணையும் இன்று வாழவில்லை. இராமனுடைய கதை மட்டுந்தான் தலைநிமிர்ந்து வாழ்கின்றது. அந்த மொழி பெயர்ப்பும் அப்படியே வடமொழி வாக்கியங்களைத் தமிழில் கொண்டுவந்து விடவில்லை. அவ்வாறு கதைப்போக்கு மாறாமல், கருத்துக்கள் வேறுபடாமல் சொல்லுக்குச் சொல் அது மொழி பெயர்க்கப்பட்டிருப்பின், ஒருவேளை அது என்றோ இறந்துபட்டிருக்கும். அவ்வாறன்றி, கதைப் போக்கை ஒருவாறு தழுவிக்கொண்டு, தமிழ்நாட்டுக் கொள்கைக்கு மாறுபடாது, இனிய கவிதைகளால் அக்கதையை ஆக்கித் தந்தமையே இந்நாள்வரை அதை இங்கு வாழவைக்கின்றது. இன்று அதை நாட்டில் வேண்டா என்று கூறக்கூடிய அளவுக்கு