பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் சேக்கிழாரும்

381


‘கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்,' என்ற அந்த உயர்ந்த அளவுக்கு, மற்றவன் தம்மை விரும்பாத வகையில் தம்மைச் சரிசெய்து வாழவேண்டுவதே கற்புநெறியென்பது இந்நாட்டுக் கொள்கை. அந்த வகையில் சீதையின் கற்பு மாசுண்டதே எனினும், மற்றவர் தீண்டின் அடியோடு கெட்டழியும் என்பதைக் கருதித்தான், கம்பர், சீதையை இராவணன் ‘மண்னெடும் கொண்டு போனான்' என்றார். இராவணன் மண்ணெடும் கொண்டு சென்று தன்னாட்டில் அவளைச் சிறை செய்த காலத்து, அவள் தன் நிலை பிறழவில்லை என்பதை மேலும் எண்ணி, அனுமன் வாக்கினாலே அதையும் விளக்குகின்றார். சீதை இராவணன் மண்ணையும் மிதிக்கவில்லை என்பதை,


'உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் ஐய!
தவம் செய்த தவமாம் தையல்.’

என்று எடுத்துக் காட்டுகின்றார். மனத்திலே மாசு உண்டாயின், அதனால் கற்புக் கெடும் என்பதை, இராமன் அம்பால், இராவணன் இறுதி நாளில், பின் மற்றொரு சிறந்த பாடலில், பிறர் நெஞ்சு புகாத கற்புக்கரசி மண்டோதரி புலம்பலில் வைத்து,

‘கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்,
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி! ’

என்று காட்டுகின்றார். உள்ளத்தால் உள்ளலும் தீதே என்ற வள்ளுவர் வாய்மொழி இங்கு அப்படியே விளங்குவதைக் காணலாம். இப்படித் தமிழ்நாட்டிற்கே சிறந்த ஒன்றாகிய கற்பின் பொற்பினை வால்மீகி எப்படிக் கூறினபோதிலும், கம்பர் இந்நாட்டு முறையில் தவருதபடி செம்மையாக்கிக் காட்டும் நெறிதான் அவரை இந்நாட்டில் இன்றும் வாழ வைக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்ற உயிர்த் தத்துவத்தை மேலே சில இடங்களில் கண்டிருக்கிறோம். மனித