பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

கவிதையும் வாழ்க்கையும்


இனம் மட்டுத்தான் வாழ வேண்டும் எனும் குறுகிய மனப்பான்மை கடந்து, உயிர்களெல்லாம் வாழ வேண்டும் என்ற அன்பு வழியிலன்றோ தமிழர் பண்பாடு விரிந்து நிற்கின்றது! இவ்வுண்மையைக் கம்பர் நன்கு காட்டுகின்றார், மனித இனத்தைக் கடந்து விலங்கினத்தையும் பறவை இனத்தையுங்கூடக் கம்பர் ஒத்து நோக்கிக் காண வைக்கின்றார். அயோத்தி நகர மன்னன் தசரதன் மக்களாகிய நால்வரும் உடன்பிறப்பால் ஒன்றியது உண்மைதான். ஆனால் அதற்கும் மேலாகக் கம்பர் வன வேடனாகிய குகனையும், குரங்கரசனாகிய சுக்கிரீவனையும் உடன் பிறப்பாளர்களாகவும், ஜடாயு என்னும் பறவையைத் தந்தையாகவும் காட்டும் காட்சி உயிர்த்தத்துவத்தின் அடிப் படைக் காட்சி யன்றோ! 'குரங்கை உடன்பிறப்பாளனாக, எங்காவது யாராவது கொண்டிருக்க முடியுமா?’ என்று கேட்கத் தோன்றும். ஆனால், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதும், மனிதப் பிறவியே மீனினத்தின் அடியிலிருந்து வளர்ந்த ஒன்று என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகி விட்ட இந்த நாளில், அந்தக் குரங்கை உடன் பிறப்பாளனுகக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பது புலப்பட வில்லையா!

'முன்புளம் ஒருநால்வேம்! முடிவுளது எனஉன்னா அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.'

என்று இராமன் கூறினனோ இல்லையோ நாமறியோம். ஆனால் கம்பர், அவ்விராமன் வாக்கில் இத் தொடர்மொழியை அழகாகக் கூறி, அதனால் மக்கள் இனத்தில் ஏற்றத்தாழ்வு வேண்டா என்பதை வற்புறுத்திக் காட்டுகின்றார் அல்லவா? மக்கட் பிறவியில் பிறந்தார் யாவருக்கும் வேறுபாடு இல்லை என்பதும், அன்பு அனைவரையும் ஒன்று சேர்க்க வல்லது என்பதும் இதனால் அறியப்படும் வாழ்க்கை உண்மையன்றோ? இனிச் சடாயுவை நோக்கும்போதும், சுக்கிரீவனை நோக்கும் போதும் இந்த உணர்வு மேலும் விரிவடைகின்றது. 'சடாயு ஒரு பறவை; அது எப்படிப் பேசும்?' என்ற கேள்வி எழலாம்.