பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

கவிதையும் வாழ்க்கையும்


“விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினுற் சொன்ன ரேனும் எம்பிராற்கு ஏற்ற தாகும்”

என்றும், சமரச உணர்வை உலகுக்கு வழங்கும் அச்சைவ சமயத்தே, பிற சமயத்தைப் பழித்துரைக்கும் மாசு அறியக் கூடாத ஒன்றுதான். அதனாலே இடைக்காலத்திலும் இன்றும் சைவர்களே சைவத்தை வெறுக்கும் அளவுக்கு அச்சமயம் சற்றுத் தளர்ந்துள்ளது. சைவம் மட்டுமன்றி, வேறு எச்சமயத்தில் எழுந்த நூலாயினும், மக்கள் வாழ்வோடு அது பொருந்தி, மற்ற உயிர்களுக்குத் தீங்கிழைக்காது, நல்ல பண்பாட்டு நெறியில் செல்லின் வாழும். சேக்கிழாரே தம் நூலில் மனு நீதி கண்ட சோழன் வரலாற்றில் பிற உயிர்களை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதைத் திட்டமாகக் குறிக்கின்றார். அறத்தாறு வாழ வேண்டியவன் அரசன். அவ்வறநெறிக்கு யாரும் எதிர்நிற்க முடியாது. பெற்றவராயினும், பிறர்க்கு ஊறு செய்வார் தண்டனையைப் பெற்றே ஆக வேண்டும். அப்பிறர் மனிதராகவே இருக்க வேண்டுவதில்லை. எந்த உயிராயினும், அதற்கு ஊறு நேரலாகாது. அதுதானே உயிர்த்தோற்ற அடிப்படை அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைச் சேக்கிழார் கூறுவதைக் காணலாம்:

‘மானிலம்கா வலன்ஆவான் மன்னுயிர்காக் கும்காலை
தான் அதனுக்கு இடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும்தீர்த்து அறம்காப்பான் அல்லனே?’

என்று சேக்கிழார் கூறும்போது, உலகில் அரச நீதி எவ்வாறு புரக்கப்பட வேண்டும் என்பது நன்கு விளங்குகிறது அன்றோ! இவ்வாறு கூறிய அரச நெறியை மனுச்சோழன்மேல் ஏற்றி ஒர் உயிராகிய பசுவின் கன்றுக்காக மற்றோர் உயிராகிய மன்னவன் மகனையே பழி வாங்கும் நிலை உயிர் வகையில் வேறுபாடு காணாராய், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, என்ற வள்ளுவர் வாய்மொழியை வரலாற்றால் போற்றும் வகையில் விளக்குகின்றர். அவர் கூறும் நிலை இதுதான்