பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் சேக்கிழாரும்

389


'ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான்என்

பதும் உணரான்

தருமந்தன் வழிச்செல்கை கடன்என்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உறஊர்ந்தான் மனுவேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான்."

என்று ஆட்சி செய்தலின் அருமையைக் காட்டுகின்றார் அவர்.

அரச நெறியைக் கூறிய சேக்கிழார் மக்கள் நிலை பற்றியும் கூறுகின்றார்; மக்களுள் ஆடவரும் பெண்டிரும் உயர்வு தாழ்வு மனப்பான்மை இன்றி வாழவேண்டும் என்பதையும், இல்லற வாழ்வு தம்மை ஒறுத்தாயினும் மற்றவருக்கு உதவி செய்வதற்கே என்பதையும், சமுதாய வாழ்வில் உயர்வு தாழ்வு இன்றிச் சாதிபேதமற்ற ஒரு நிலை நிலவ வேண்டுமென்பதை யும், அரசனாயினும் ஆண்டியாயினும் உயிரமைப்பில் இருவரும் ஒருவரே என்பதையும், இவை போன்ற பல உண்மைகளையும் நல்லவகையில் விளக்குகின்றார். சங்க காலத்தே சாதியின் பெயர்கள் தொழில்பற்றி வந்த வகையினைக் காண்கின்றோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்,' என்ற வள்ளுவர் வாக்கு அன்றும் போற்றப்பட்டுத்தான் வந்தது. அ வர வர் தொழிலாலேயே பலர் வழங்கப்பட்டனர் என்பது தெரிகிறது. பின்னால் தோன்றிய வகுப்பு வழியில் வரும் பட்டப் பெயர் களைச் சங்க காலத்தில் யாண்டும் காணல் அரிதாகும். சேக்கிழார் காலத்தில் சாதிகள் நாட்டில் ஊன்றி நிலைத்த இடம் பெற்றுவிட்டன. சாதி வெறியும், சமய வெறியும் நாட்டில் தலை விரித்தாடின. எனினும், அக்காலத்திலும் சாதியால் வரும் பட்டப்பெயர்களை யாரும் சூட்டிக்கொண்ட தாகத் தெரியவில்லை. ஆயினும், சாதியின் பேரால் உயர்வு தாழ்வு மனப்பான்மையும் பிற வேறுபாடுகளும் நாட்டில் நிலை பெற்று விட்டன. அக்காலத்தில் சேக்கிழார் தம் நூலில் இந்த வேறுபாடுகளை யெல்லாம் வேரறுக்க வேண்டிய வகையில், பல உண்மைகளைத் தேடி ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார்.