பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

கவிதையும் வாழ்க்கையும்



பெரிய புராணத்தில் வரும் அத்தனை நாயன்மார்களைப் பற்றிய வரலாறுகளையும் எப்படி இவர் பெற்றார் என்று கூற முடியாது. ‘இல்லையே என்ற இயற்பகை’ எனும் ஒரு தொடரை வைத்துக்கொண்டும், அதன் அடி ஒற்றிய அந்தாதிப் பாடல் ஒன்றை வைத்துக்கொண்டும், சேக்கிழார் அவர் வரலாற்றை எப்படி இத்துணை விரிவாக எழுதினர்? ‘இளையான்றன் குடிமாறன்’ என்ற பெயரைக் கொண்டு, இரவில் நெல் முளைவாரி அடியாரை உண்பித்தார் என்பது, எப்படி விளங்கிற்று? கதைகள் திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரர் காலத்திலேயே நடந்தன அல்ல. ‘கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர் எப்படிக் காட்டு வேடுவரானர்?’' என்றால் என்ன பதில் கூற முடியும்? இத்தனைக்கும் பதில் கூற முடியாதுதான். எனினும், சேக்கிழர் சோழ மன்னனிடம் அமைச்சராய் இருந்தமையானும், அவன் பொருட்டே தாம் இந்தப் பெரிய புராணத்தைப் பாடினமையானும், பல இடங்களுக்குச் சென்று தகவல்கள், சேகரித்திருப்பார். எனினும், அத்தனையும் உண்மையான தகவலாக அவருக்குக் கிடைத்திரா. கிடைத்தவற்றை வைத்துக்கொண்டு ஆராய்ந்து அவர் தம் நூலை எழுதியிருப்பார். இந்த நிலையில் காலத்தொடர்பில் சில கதைகள் அறுபட்டிருக்கலாம். என்றாலும், சமுதாயத்தில் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியைக் சேக்கிழார் சுட்டிக் காட்டிக் கொண்டேதான் செல்கின்றார். சாதி வேறுபாடற்ற சமுதாயம் அவர் விரும்பிய ஒன்று. அந்தணராகிய அப்பூதிஅடிகளைத் திருநாவுக்கரசு என்ற வேளாண் குடிமகனுக்குக் குடும்பத்தோடு அடிமையாக்குகின்றார். ஆனால், காலத்தின் போக்கு ‘அந்தணர் வேறோர் அந்தணருக்கு அடிமையாதல் இல்லை’, என்றிருந்ததைச் சுந்தரர் வாழ்க்கை வாயிலாகக் காட்டி, அக்கொள்கையையும் தோற்கடிக்கச் செய்கின்றார். அந்தணர் குலத்தவரான சம்பந்தரைப் பாணர் குலத்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு பிணைத்துப் பேசுகின்றார். ஆதிசைவ குலத்துச் சுந்தரருக்கு வேளாண் குலத்துச் சங்கிலியாரை மணம் செய்துவைக்கிறார். பூசை செய்வதற்கே பிறந்த குலம் தம்முடையது என்று தருக்கிய சிவகோசரி-