பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் சேக்கிழாரும்

391


யாரைக் காட்டி, அவர் பூசையினும் தீண்டத்தகாதவன் எனப்படும் கண்ணப்பன் பூசை எத்தனையோ மடங்கு மேலானது என்பதை விளக்குகின்றார். ஒரு குலத்திலோ, அன்றிச் சாதியிலோதான் ஆண்டவன் அடியவர் பிறக்க முடியும் என்ற வேற்று எண்ணத்தை மாற்றி, எக் குலத்திலும் அடியவர் அன்பு காரணமாக வாழ முடியும் என்ற உண்மையை நூல் முழுதும் காட்டிக் கொண்டே செல்கின்றார். ஏழை பணக்காரர் என்ற வேறுபாடும் மாயவேண்டும் என்பதைச் சேக்கிழார், சுந்தரர் சேரமான் பிணைப்பில் விளக்குகின்றார். அரசர் சேரமானும், எளிய வாழ்வு வாழ்ந்த சுந்தரரும் இணைபிரியாத் தோழராய் இருந்ததைக் காட்டுகின்றார். தம்மை ஒறுத்தவருக்கும் தீங்கிழைக்காத புனிதப் பண்பினை மெய்ப்பொருள் நாயனாரிடம் காட்டி, கொல்ல வந்தானையும் காப்பாற்றச் சொல்லி வாழவைக்கின்றார். இவ்வாறு மனித வாழ்வுக்குத் தேவையான—சமுதாயத்தை வாழவைக்கத்தக்க—உயர்ந்த பண்புகள் அத்தனையையும் தம் நூலில் காட்டியுள்ளமையினாலேதான், சமயப்பற்று முதலியவற்றால் தோன்றும் சிறுசிறு குற்றங்களுங்கூடத் தெரியாதபடி அப்பேரிலக்கியம் வாழ்கின்றது.

எனவே, இதுவரை கூறியவற்றால், கம்பரது இராமாயணமும், சேக்கிழாரது பெரிய புராணமும் சிறுசிறு குறையாடுகள் உடையனவேனும், அவை, மனித வாழ்வின் அடிப்படையைப் பற்றியே அமையும் கவிதைகளானமையின், இன்றும் வாழ்கின்றன. இனியும் வாழும் என்பதை அறிந்து கொண்டோம்.