பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

கவிதையும் வாழ்க்கையும்


காட்டுவர். 'தெய்வம் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாளாய்க்' கற்புக்கடம் பூண்ட தமிழ் நாட்டுத் தாய்' பேரிளம் பெண்ணாகிய, முதுமைப் பருவத்து நிலையிலேயும், தெருவில் செல்லும், ஒருவனக் கண்டு தன் வசமிழந்து கருத் தழிந்து நிற்பதாக ஒரு காவியம் பாடின், அக்காவியம் எத்தனை சொற்சுவை, பொருட்சுவை பொருந்தியதாய் நிற்பினும், இம்மண்ணில் வாழுமோ? நல்லவேளை! அதுபோன்ற இலக்கியம் நாட்டில் அதிகமாக வளரவில்லை. தோன்றிய இரண்டோர் உலாக்களுங்கூட, எங்கோ மூலை முடுக்குக்களில் அடங்கிக் கிடக்கும் வ்கையில் அமைந்து விட்டன என்று கூறலாம். அவற்றைப் பற்றி மேடையில் பேசுவாரும் அதிகம் இல்லை. ஏதோ கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்களுக்காக இரண் டொன்று வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவே மனிதனை மட்டு மன்றிக்கடவுளரையும் இத்தகையஉலாக்களுக்குத் தலைவராக்கி, அவரைக் கண்டு பெண்டிர் கருத்தறிவதாகவும் சிலர் பாடுவர். ஆனல், அதிலேயும் கற்புடைப் பெண்டிர் நிலை குலையும் வகை தான் காணப்படுகின்றது. இவ்வாறு உலாப் பாடுவதன் கருத்து வேறு என்றும், அது பெண்களுக்கு இழிவு தேடித் தருவதன்று என்று சிலர் வாதிப்பர். எனினும், எப்படியாயினும், அது மனித வாழ்வை விளக்க வல்ல ஒரு நூலன்று என்பது தேற்றம். அதன் வளர்ச்சியின்மை ஒன்றே அந்நூல் உலக மக்கள் வாழ்வு நெறிக்கு மாறுபட்ட ஒன்று என்பதைத் திட்டவட்டமாகக் காட்டுமன்றோ!

இவற்றைத் தவிர, இன்னும் எத்தனையோ பிரபந்தங்கள் கடந்த நூற்றாண்டுகளில் தோன்றி நின்றன. மாலையும், கோவை யும், தூதும், அந்தாதியும் எண்ணற்று வளர்ந்தன. எல்லாம் ஒன்றை ஒன்று பார்த்து எழுதுவது போன்று அமைந்து, பொருளாழ மற்று, வெற்றுப் பாடல்களாகவே நின்றன. உண்டாக்கியவன் வாழ்ந்த காலத்திலேயே கேட்பாரற்று மடிந்தன பல. இக்காலத்திலேதான் நாம் மேலே கண்ட தல புராணங்களும் தோன்றலாயின. ஊர் மேற்கொண்ட பற்றாலோ அல்லது ஒரு நூறு வெண்பொற் காசுக்காகவோ ஒரு புராணம்