பக்கம்:கவிதை நூல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

யாழ் நூல்


வேறு

அறிவியற் பொருளி னியல்பினை விளக்கும் அருந்தமிழ்க் கட்டுரை வரைந்தான்,
பிறமொழிப் புலவர் பாநலந் தமிழிற் பெயர்த்துளஞ் சிறந்தனன், புலமைத்
திறமலி கலைநேர் மாணவர் தமக்குச் செந்தமி ழியல்வளந் தெரிக்கும்
அறம்வளர் பணிபூண் டறிவினா லின்ப மார்தரச் செய்தன னன்றே.


ஒப்பருந் திறத்தால் நாடகத் தமிழி லுயர்வினை மதித்துள முவந்தே
செப்பருஞ் சீர்சால் செந்தமிழ் முடியும் சிறந்தமே னாட்டவர் திறமும்
இப்பரி சென்றே யாவரு முணர மதங்கசூ ளாமணி யெனுநூல்
மெய்ப்பட நடிக்கும் விறல்மிகத் தந்தான் வியந்திவற் புகழ்ந்தனர் புலவர்.


ஆங்கில மொழியிற் புலவராம் பெரியோர் அருந்திறற் புலமையிற் றிளைத்தே
பாங்குறு மவர்தம் பாக்களிற் சுவைதேர் பயிற்சியின் முதற்படி யாக
ஆங்கில வாணி யெனப்பெயர் தந்தே அவர்சொலுங் கவிகளிற் சிலதேர்ந்
தோங்கிய சுவைதேர் தீந்தமிழ்ப் பாட லுரையினை யியற்றினன் மாதோ.

வேறு



செல்வ னண்ணா மலைநிறுவுஞ் செழுங்கலைதேர் நியமமெனத் திகழும் எங்கள்
தில்லை நகர்க் கழகத்தும் தென்னிலங்கைத் தீவகத்தார் பயிலுஞ் சீர்சால்
பல்கலைதேர் கழகத்தும் பாங்குபெறுந் தமிழ்த்தலைமைப் பண்பா ரின்பம்
மல்கவரும் பேராசான் மன்னியபல் கலைவளர்த்தே மகிழுந் தோன்றல்.



கானருகே வயலருகே கடலருகே மலையருகே வாழும் சான்றோர்
தேனெனவே வளர்த்ததமி ழேழிசைநூற் றிறங்கண்டே தெளிவான் ஓர்நாள்
மீனொளிருங் கடலிலங்கை விளங்குமட்டு நீர்நிலையு ளெழுநல் லோசை
தானுணர்ந்தே யேழிசைதே ராராய்ச்சித் திருத்தொண்டிற் றலைநின் றானால்.



இசையுருவாய் நின்றபிரா னெழுந் தருளுந் திருக்கயிலை யிறைஞ்சிப் போற்றும் நசையதனால் நம்பெருமான் திருவடியே துணையென்ன நயந்து வானின்
மிசையவருஞ் செலற்கரிதாய் அம்மையப்பர் வீற்றிருக்கும் மேன்மை பெற்றே திசைமுழுதும் விளக்கியசீர்த் திருமலையை வலங்கொண்டு திகழ்ந்தா னன்றே.



பனிமலையின் பாங்கரொளிர் திருக்கயிலா யப்பரப்பிற் பால்போற் றோன்றி
யினிமைதரு மானதநீர்த் துறையாடி இறையருள்சே ரெழில்பெற்றோங்கித்
தனிமையொளிர் தவநெறியால் மனமாசு தவிர்ந்திறைவற் றாழ்ந்து போற்றிக்
கனிமனத்தால் கண்களெலாம் நீர்மல்கக் கசிந்துருகும் வாழ்வு பெற்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_நூல்கள்.pdf/6&oldid=1439728" இலிருந்து மீள்விக்கப்பட்டது