பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கண்ணும் இல்லையே! அதுபோலத் தம்மை அண்டிப் போரிடத் துணிந்தவர் தப்புதல் அரிது என்கிறார். “துஞ்சுபுலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே” என்பன அவ்வுவமையைக்காட்டும் அடிகள். மேலும், இவர் பொதுப் பெண்டிரை விரும்பா இயல்பினர் என்பதும் இவரது பாடல் அறிவிக்கும் கருத்தாகும். இவர் இக்கருத்தினை தமது சபத மொழியாகவும் கூறுகிறார்.

மற்றொரு பாடலால் நாம் அறிவனவற்றையும் காண்போமாக. “அரச உரிமையை ஆண்மை அற்ற சிறியோன் பெறின், அது சிறந்தது அன்று. அது அவனுக்குப் பெரும் பாரமாக இருக்கும். மன எழுச்சியும் வலிய முயற்சியும் உடைய சிறியோன் பெற்றால், அது அவனுக்குப் பாரமாக இராமல் இலேசாக இருக்கும்” என்று கூறும் கருத்தே சீரிய கருத்து. இக்கருத்தே இவரது இரண்டாம் பாடலில் தொனிப்பதாகும்.