பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பட்ட மன்னர் ஆவார். இப்புலவர் பெரு மக்கள் பாடிய பாடல்களால் இவ்வரசர் பெரு மகனாரது வாழ்க்கைக் குறிப்புக்கள் பல வெளி யாகின்றன. “பிள்ளை தான் வயதில் மூத்தால் பிதாவின் சொற் புத்தி கேளான்” என்பது நம் நாட்டு முதுமொழி யாதலின், கோப்பெருஞ் சோழருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் மனம் ஒன்றுபடாத காரணத்தால் போரும் மூண்டது. அது பிற நாட்டுப் பகை மன்னர்களால் தொடுக்கப்பட்ட போராக இன்றிக் குடும்பத்திற்குள்ளேயே எழுந்த போராக அமைந்தமையால், இது கண்டு புலவர்கள் சும்மா இருந்திலர். இதனை மூண்டு எழ ஒட்டாமல் தடுக்கமுயன்றனர். புல்லாற்றூர் எயிற்றியனார் இதில் முனைந்து நின்றார். புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் கோப்பெருஞ் சோழனை அணுகி, “புகழால் விளங்கும் வெற்றி வாய்ந்த வேந்தே! உன்னோடு எதிர்த்துப் போரிடுபவர் உன் பகை வேந்தர்களாகிய சேரரும் அல்லர்; பாண்டியரும் அல்லர். உன் எதிரே போர்க்கோலம் பூண்டு போர் புரிபவர்க்கு நீ பகைவனும் அல்லன். நீ நிலவுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணுலகிற்கு விருந்தாகச் சென்றபின், உன் அரசு இது போது உன்னோடு எதிர்த்து நிற்கும் இம் மக்களுக்கே சேர்தற்குரியது. உன்னோடு எதிர்த்துப் போர் புரியும் உன் மக்கள் சூழ்ச்சி இல்லாத அறிவுடையவர்கள். இவர்கள் உன்-