பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்



பக்கத்து விட்டம்மாள் பரிவி னாலே
பாபுபசி யொருவாறாய்ப் படிய லாச்சு!
துக்கத்தைக் கண்ணீராய்ச் சொரிய விட்டென்
துணைவிதுடி துடித்தவரை யென்முன் தோன்றி,
"அக்கிரம மில்வாறாய் நீங்க ளிங்கே
அலுங்காமல் குந்திக்கொண் டிருப்ப தந்தோ!
மக்களொடு மனைவியென வுங்க ளுக்கும்
மண்ணுலகி லெதற்காக வேண்டு" மென்றாள்.

எதுவொன்று மியலவில்லை யென்னால் பேச;
இத்தனைக்கும் காரணமென் னியல்பே யன்றோ?
பதுமையென இருந்தவனைப் பார்த்து மேலும்,
'பசிதணிய வேண்டுமெனின் பரிந்து சென்று
கதுமெனவே பணந்தேடி வாரீர்! இல்லை,
கருணையுட னெமைப்பிறந்த வீட்டிற் கேனும்
பதிலின்றி யனுப்பிவைப்பீ ரென்றாள், தாரா!
'பார்க்கலா மப்படித்தா னென்றேன். நானும்!

பார்க்கலாங் கீர்க்கலா மெல்லாம் வேண்டாம்;
பரபரப்பா யெழுந்திருங்க ளென்றாள், தாரா! '
ஊர்க்காக நானழுது தீர்த்தால் கொஞ்சம்
உபயோக மாயிருக்கு' மென்றெழுந்து,
தாற்கச்சி பட்டவொரு மாட்டைப் போலத்
தடதட'வென் றங்கிருந்து, நடக்க லானேன்;
மோர்க்காரி யெதிர்ப்பட்டாள்; "ஐயா! மொத்தம்
முன்பாக்கி கொடுத்துவிட்டுப் போங்க" ளென்றாள்.

112