பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

சிந்தாகுலம்

சோம்பல் மிகுந்தவர் தேம்பித் திரியச்
சுகங்கள் சுருங்குதல்போல் - ஆற்றில்
தீம்புனல் வற்றித் தெருவெனக் காணத்
திடுக்கிடு தென்னிதயம்!

பூமிக்கும் பொய்கையே பொன்னணி யாயினப்
பொன்னிற் பொதிந்தமணி - யென்னும்
தாமரையல்லி குவளை மலர்கள்
தவித்துயிர் தாமிழக்கும்!

தோழமை யோடும் தொடர்ந்து வசிக்கிற
துள்ளுங் கயலினங்கள் - நீர்க்
கோழியுங் கொக்கும் புரியும் கொடுமை
குறித்துக் குலைந்திறக்கும்!

'காப்பதற்கான கருணை நதியெமைக்
கைவிட்டு விட்ட'தெனக் கத்துந்
தோப்புந் துரவு. வயல், குளம் யாவும்
துயரத்தில் தோய்ந்து விடும்!

கிளிக்குரல் மாதர் களிக்கப் பருதி
கிளிம்பிடும் முன்னெழுந்து - தன்னில்
குளிக்க வராம லிருப்பின் துறையும்தன்
கோலமிழந்துவிடும்!

129