கவியகம்
மனக்குடங்க ளெல்லாம் மடுத்து மறிய
எனக்குடன் பட்டென்னிதயம் - இனிக்கவொரு
வற்றாத வூற்றாய்ச் சுரந்து வழங்கிடுமோ
வுற்றார் முகக்க வுவந்து?
வல்லா னொருவன்தன் வாய்வைத் திசைக்குமொரு
புல்லாங் குழலினைப் போல்வேனோ? - அல்லவெனில்
காதாரப் பெய்து களிப்பிக்கும் யாழேயோ
யாதா யமைகுவன் யான்?
நீடிய குன்றின் நிலைத்தசிக ரத்திருந்து
நாடினேன் நான்மௌன நன்னிலைமை - நாடி
நனியினிய நல்லதெதைக் கண்டெடுத் தேன்நானே
இனியதனை வேண்டா மெனற்கு!
இதுவென் வினைவறுக்கும் நாளாயினிங்கே
விதியா யுழுது விதைத்தேன் - அதுவும்
எருவைத்து நீரிறைத் தேமுற்றாங் கெந்தப்
பருவத்தில் செய்தேன் பயிர்?
இதுவென் விளக்குயர்த்தும் நாளாயி னிங்கே
புதியவொளி புகுந்த போதும் - அதிலே
எரிவதா மென்சுடரன் றெண்ணெயென தன்றிவ்
விரவினிலே யேற்றுவேன் நான்!
இரவினது காவலனே யென்னையும் பார்த்துத்
திரியிட்டுச் சாலத் திகழ - எரியிட்டு
விண்ணில் சுடரும் விளக்காக்கி வைத்தினிய
தண்ணொளியுந் தந்தருளா வான்!
149