வெள்ளியங்காட்டான்
அன்புமுடி சூட்டி ஆள அமைப்பதுபோல்
துன்பக் கொடுமையும் தோற்றுவிக்கும் - இன்பமும்
தொட்டு வளர்த்ததுபோல், தோண்டி யடியோடு
வெட்டவும் செய்யும் விழைந்து!
பதரகலத் துாற்றிப் பதமா யுலர்த்திக்
குதிருரலிற் பெய்தொளிரக் குற்றும்; - அதிரப்
புடைத்துப் புறம்போக்கும்; போற்றியே வாரி
யிடித்துமா வாக்கு மெடுத்து.
மென்மையுற வுங்களை மேலும் பிசைந்தினிய
தன்மையுறத் தட்டித் தணலிட்டு - நன்மையுற
தூய விருந்தாய்த் துலங்கவே செய்விக்கும்
ஆய இறைவற் கமுது!
உங்களது நல்லுள்ளத் துண்மைகளை நீங்களே
உங்கட் குணர்த்தி யுவந்திடவே - உங்களை
உய்விக்க வந்த வுரிமைசால் பேரன்பு
செய்விக்கும் மாற்ற மிவை!
அச்சங் கருதி யமைதியை மாத்திரமே
நச்சிடுவீ ராயின் நனிவிரைந்து - நிச்சயமாய்
போரடிக்கும் போதே புறம்போந் தொழியுங்கள்
பாரிடுக்கில் வித்தாய்ப் படிந்து.
என்ன கொடுத்தாலு மென்னதான் கொண்டாலும்
தன்னையே தான்கொடுத்துத் தன்னிடமே தான் கொள்ளும்
மன்னுங் குணங்கொண்டு மாண்புறும் மாநிலத்து
ளன்னதா மன்பி னியல்பு.