இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவியகம்
துறவுறல்
தனிமை தான்தவமாம்-தவிர்க்காத்
தன்மை சிலவமைந்தால்
இனிமை யிதிலுண்டாம்! - இருமைக்
கின்ப மிதிலு ண்டாம்!
ஒப்பு யர்வெல்லா - முள்ள
ஒழுக்க மிதுவொன்று,
அப்ப முக்கில்லா - துள்ள
அன்னை யனையதுவாம்!
ஈன மென்பவெலா - மில்லா
தேற்றம் தருகின்ற
ஞான மிதுவொன்று. - நமக்கு
நல்ல தந்தையுமாம்!
கடனெ னக்கொண்டு - காட்டும்
கருணை யிதுவொன்று,
உடன்பி றப்பெனவே - உலகில்
உதவ வுறுந்து ணையாம்!
நீதி நெறிநீங்கா - நெஞ்சம்
நிறைந்த சொல்லொன்று,
காதல் மனைவியெனக் - கடுகிக்
கைகொ டுத்திடுமாம்!
159