பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளியங்காட்டான்

கூகையும்மெய்ம்மறந்துபொந்தில்
குந்தி யிருக்கும்டா!
பாகின் இனிய குரல் - குயில்
பண்கள் மிழற்றுமடா!
தோகைக் களிமயிலும் - நடனம்
தொடங்கும் சமயமடா!
சோகம் தொலைந்திடவே - உலகம்
சொக்கி மகிழுமடா!

தாமரைக் கோவிலிலே - கதிரோன்
தாழை அகற்றிடுவன்!
சேமக் கலன்முழக்கி - வண்டுகள்
செய்தி பரப்பினதும்
மாமரச் சோலையிலே - கிளி
மங்கல வாழ்த்திசைக்க
கோமள மானகலைச் - செல்வி
கொலுவில் அமர்ந்திடுவாள்

தேனெத்த செந்தமிழில்-துதி
செப்பிச் சிரத்தையுடன்
வானக் கதிர்மதியை - மலராய்
வண்ணக் கவிதையெனும்
ஏனத்தி லிட்டெடுத்தே - எழிலாய்
இறைவியின் முன்படைப்போம்!
ஞானத்தை நல்கிடுக - தமிழ்
நாட்டுகிளியெனவே!

16