இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவியகம்
எழில்மி குந்த மாலை வேளை
எனக்கி ரங்கி வருகுது:
இதயம் கடலும் அலையு மாகி
இன்பம் பொங்கிப் பெருகுது:
முழவும் குழலும் முயங்கி நெஞ்சில்
மோகம் மூளப் புரியுது:
முல்லை மணத்தை அள்ளித் தென்றல்
முன்றில் தோறும் திரியுது:
தொழுவை ஒன்றிக்கிடந்த கன்றும்
துள்ளித் தாயைத் தேடுது:
தொலைவில் மேய்ந்த பசுவும்
திரும்பித் துரித நடையைப் போடுது:
அழகு கொழிக்கும் கிளியும் பழகும்
அரச மரத்தில் கூடுது:
அருமைக் காதல் மொழிக ளாடி
அகம கிழ்ந்து பாடுது!
பொழுதில் பூத்த லர்ந்த மலரும்
பொன்வண் டணையக் கோருது:
புலனில் புதுமை பொலிய வண்டும்
பூவை நாடிச் சேருது;
எழுதும் தொழிலும் முடிந்து கொழுநன்
எழுந்திருக்கக் கோருது:
இனிக்கப் பேசிச் சிரித்து மகிழ
இதயம் முந்தித் தீருது!
23