கவியகம்
இளவேனில் பருவத்தே கருப்பஞ் சாறாய்
இனிக்க இசை யெழுப்பிக்கொண் டேகுங் காட்டா
றுளதாயின் நீர்வேட்கை யுற்றோ னுக்கங்
குண்டாகும் இன்பம்போன் றெனக்கு மாவார்!
தலைவாழை இலைதனிலே, பருப்பும், நெய்யும்,
தரமான கறி, குழம்பு, ரசம்மோ ரோடும்
பலகாரத் துடனுணவு படைக்கக் கண்டே
பசித்தவனின் இன்பம்போன் றெனக்கு மாவார்!
உச்சிசுடும் வெய்யிலிலே, சாலை ஓரம்
ஒருமுகமாய்த் தழைமண்டிக் குறாகு ளென்னும்
பச்சைமா நீழலிலே வழிப்போக் கன்றான்
பதிந்திருக்கும் இன்பம் போன் றெனக்கு மாவார்!
மழைக்குமழை தவிராதே உழுது, வண்டல்
மண்ணுடனே எருக்கலந்து கொட்டி, வித்தி
உழைப்புக்குத்தக்கபடி விளைந்த புன்செய்
உழவனுறும் இன்பம்போன் றெனக்கு மாவார்!
காலையிலே கஞ்சிவைத்துக் கொடுத்து விட்டுக்
கழனியிலே நாற்றுநடச்சென்ற அன்னை
மாலையிலே மனைக்குவரக் கண்ட அன்பு
மக்கள்படும் இன்பம்போன் றெனக்கு மாவார்!
27