பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

வான்தாரா வண்ணமதி முகத்தாள்மேனி
வடிவழகைப் பருகிடஎன் விழிகள் தேடத்
தேன்தாரா மதுர மிகு குரலில் பேசும்
தெளிமொழிகள் பருகிடஎன் செவிகள் தேடக்
கான்தாராக் கவின்சுளையாய்க் கருத்துக் கேற்பக்
கற்பனைகள் சுரப்பதற்கென் கவனம் தேட,
என் தாரா வரவில்லை? எனும் வினாவும்
இதயத்தில் கடலலைபோல் எழுந்த தன்றே.

படித்துவைத்த கற்பனைகள் நூலறுந்த
பட்டமெனப் பயனின்றிப் பாழாய்ப் போகக்
கொடுத்து வைத்த பொருளனைத்தும் 'இல்லை' யென்ற
கொடியமொழி கேட்டகுடி மகன்போல் நொந்து,
வடித்துவைத்த சோற்றுக்கும் வகைகாணாமல்
வாசலிலே விழியிரண்டும் வளர வைத்துப்
பிடித்துவைத்த பசுஞ்சாணிப் பிள்ளை யார்போல்
பிற்பகலெல் லாம்பேசாதமர்ந்திருந்தேன்.

விண்ணுக்குள் விளங்கிஇருள் விலக்கா நின்ற
வெய்யவனும் மெய்சோர்ந்து வீழ்ந்தான் கல்மேல்;
மண்ணுக்குள் மமதை மிகு மாந்தர் மாணா
மனமென்ன மாயஇருள் மனைபு குங்கால்
கண்ணுக்கும் ஒளிகாந்தக் காணப் பண்ணும்
கவின்விளக்கை ஏற்றமணங் கருதும் காலென்
புண்ணுக்கு மருந்தாகிப் பொருந்தும் புத்திப்
புலனுக்கு விருந்தாகப் போனாள் வந்தாள்.

53