பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

கார்முகிலைக் கூந்தலெனச் சீவிப் பின்னிக்
கவின்முல்லை மதியெனவே கமழச் சூட்டிக்
கூர்மிகுவேல் விழியொளிரக் கொவ்வைச் செவ்வாய்க்
குவியிதழில புன்முறுவல் தவழ வந்தாள்,
'பார்மகளன்றி.வள்பைம்பொன் னுருக்கி வார்த்த
பதுமையுயிர் பெற்ற தெனப் பார்த்தின் றிங்கெள்
நேர்முகமாய் நின்றதுமே நெஞ்சில் சேர்த்திந்
நெருப்பனைக்கக் கைநீட்டி நெகிழ்ந்து நின்றேன்.

புனைவுற்ற பொற்பாவை, பூனை போன்று
புகுந்தவுடன் மின்விளக்குப் பொறியை யேற்றி,
மனைமுற்றும் ஒளிநிலவச் செய்தாள்: செந்தா
மரையெனவே முகம்மலர்ந்து மகிழ்ச்சி மேலும்
தனையுற்றுப் பார்த்தன்னைத் தானும் பார்த்து:
தளிர்க்கரத்தா லென்கன்னம் தடவித் தாங்கி,
எனைவிற்று விடச்செய்தேன் அத்தான்! உங்கட்
கெண்ணாயி ரம்ரூபாய்க் கெனச்சி ரித்தாள்.

"சேற்றுக்குள் உதித்தமரை மலர்நான் அத்தான்
செங்கதிரோன் தானெனக்கு நீரும் சிந்தை
ஆற்றிக் கொள்வதுவேண்டாம்! ஆமாம்!
இந்த அகத்தினைவிட்டரைக்கணமும் அகலேன்;
நீரும் மாற்றிக்கொள் ளுங்களினி ஒன்றாய் மாறா
மனத்தினையும் மனைவியென மகிழ்ந்திப் போதே
ஏற்றுக்கொள் ளுங்களெனை", என்றாள். என்ன
"இருவருமின் றொருவரென இணைந்தோ மன்றே!

54