இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான்
தனிமை நாடித் தவம்புரிந்து - வாழ்வுத்
தகுதி சுட்டிக் கவிபுனையும்
எனையும் கூட மயக்குவதே - இந்த
இன்ப துன்ப நினைவுகள்தாம்!
மனைவிக் காகவே வாழ்வதெனின் - அது
மணமி லாமல ராகுமெனும்
நனியு நல்லதோர் கற்பனையும் - தோன்றி
நலிவை நல்லதாய் நாட்டிடவே!
கலைஞ னென்ற கருத்துடனே - வந்து
கடித மொன்றை வரைந்துவிட்டேன்!
"மலரு மனைவியு மொன்றெனவே, என்றன்
மனத்தில் வைத்திருப் பேனெனினும்,
பலரைப் போலஇ ராமலினி - இந்தப்
பாரி லேதலை யாயயொரு
சிலரைப் போல இருந்துதவி - என்றன்
செயலைச் செம்மை படுத்திடுக!
அதுநிறைந்த மணமலரே - மனம்
மகிழ்ச்சி யூறு மருஞ்சுனையே!
புதிய யோசனை வேறெதையும் - இனிப்
புரிதல் விட்டுப் புறப்படல்செய்!
இதய மென்றஇம் மாளிகையைத் - திறந்
திங்கு காத்திருப் பேனுனக்காய்!
உதய மாவதைப் பார்த்திருக்கும் - நிசி
உறக்க மற்றதோர் வண்டெனவே!
70