உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

தோட்டந் துரவுகள் சூழ அதனிடையே - எழில்வீடு
தோகை மயில் இன மான்கள் துள்ளிடயே,
கோட்டை கொத்தள மாய மைத்ததிலே - தோழிகள்
கூட இருந்துகுற்றேவல் செய்பவராய்
ஆட்டம் பாட்டுகளோடு வாழ்வதிலும் - தனது
அன்புக் கணவனின் அருகி லினிதிருந்து
ஓட்டை வீட்டி லிணைந்து வாழ்வதிலே - பெண்ணின்
உள்ளம் நிறைவுறக் கூடும்', என்றனளே.

இன்ன தெனப்பகுத் தியம்ப இயலாத - எதுவோ
இருக்க வேண்டுமோர் சக்தி உங்களிடம்!
பொன்னும் மணியுமென்றுள்ள தெல்லாமும் - வெற்றுப்
பொருள்க ளெனப்பறித் தெரிய வும்செய்தேன்.
என்னை யீன்றஅவ் வுரிலிருப்பதெலாம் - வேம்பாய்
ஏன்க சந்தன என்பதும் அறிவேன்!
என்ன என்னமோ எண்ண வைத்ததுகாண் - இந்த
இரண்டு திங்களு முங்கள் நினைவென்றாள்.

பிறையை வென்றொளிர் நெற்றி மீதினிலே - கலைந்து
பின்முன் னாகிக் கிடந்த கூந்தலையென்
நிறைந்த காதல் நிலைத்த பார்வையுடன் - விரலால்
நெறிப்படும்படி நீவி விடலானேன்.
'சிறிய அறையிது; மேலும் ஒழுகுவது - இன்னும்
சேரும் இடர்பல கோடி உண்டெனினும்
குறையெ னும் ஏது வேனு மொன்றிருப்பின் - அதுவே
கொழுநன் றனைப்பிரிந் திருப்ப தே' என்றாள்.

73