கவியகம்
ஒப்பி லாஎழில் பீலி யுகைப்பில்
உணர்வ னைத்து மொருங்கதி லொன்றி
இப்பி றப்பினி லெய்துவ தின்றே
இயைந்த தென்று வியந்திட நானும்
கப்ப லொன்று கவிழ்ந்த போன்று
கண்க லங்கக் கவலையி லாழ்ந்து
எப்ப டியினித் தப்புவ தென்றே
ஏங்கி னானென்றன் துங்கா விளக்கும்!
பேரெ ழில்தனைச் சேரப் பெருக்கிப்
பிரிய மாய்நடமாடும் மயில்மேல்,
மாரி முத்துக்கள் வாரிப் பொழிந்து
மகிழ்ச்சி கூர்ந்து புகழ்ந்ததும் வீட்டுக்
கூரை பாரியாய் மாறித் தரையைக்
குளமெனும்படிச் செய்தது மொன்று!
சாரை சாரையா யூறிச் சுவர்கள்
சகதி யாகிக் களைந்த திரண்டு!
சாறு காய்ச்சிய கட்டி படகாய்ச்
சகதி நீரில் மிதந்தது மூன்று!
வேறு வீடொன்று பாருங்க ளென்று
வேத னைக்குரல் நான்குடன், வேறு
நூறு நூறு விதம்தினம் நெஞ்சு
நொந்த ழச்செயும் வெந்துயர் - யாவும்
ஆறிச் சீவன் தழைக்கப் பருகும்
அமிழ்த மென்னத் திகழ்ந்ததக் காட்சி!
77