உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

உண்டு மகிழும் உறவின ராகி
யுவந்துனை நித்தமும் நாடிவரும் - கரு
வண்டுகள் கொடை மதுவெறி யாலே
வருத்தமுண் டாகவே வைதன வோ?

ஏறிப் படர்வதற் கேற்ற கொளுக்கொம்பொன்
றில்லையே என்பது காரணமோ - அன்றி
வேறெது வோனது வாயினும்நீசொல்ல
வேண்டுமுன் வாய்திறந் தென்னிடமே'

என்று வினவி யிதய முருகியே
இன்முகங் காட்டுகையில் - மனங்
குன்றிக் கிடந்தஅக் கோமள முல்லைக்
கொடியு முரைத்தது காண்.

மானிடர் கண்ணில்படாமல் மறைந்து
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கே - இது
தானிட மென்ப தறிந்துநா னிங்கு
தனித்துத் தழைத்திருந்தேன்!

உயிரி னினிய வுடைமைக ளாமென்
நுரிய மலர்களையின் - றெனது
வயிறெலாம் பற்றி யெரிந்திட வந்தொரு
வனிதை யபகரித்தாள்!

கருந்தன மென்னப் பொருந்திய என்னருங்
காதல் கவின்மலர்கள் - ஐயா!
மருந்துக்கொன் றின்றி வருந்தவே வந்தொரு
மங்கை யபகரித்தாள்!

82