பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

107


மட்டுமே இருந்தார்கள் அந்த ஒரு பேரனும் ஜெர்மனியில் கல்வி கற்கச் சென்றான். அங்கே 1932லே இறந்துபோனான்!

கவிஞர் தாகூரின் உயிருக்கு உயிரான நண்பர் சி.எஃப். ஆண்ட்ரூஸ் 1940-ஆம் ஆண்டில் இறந்தார்! மற்றோர் அருமை நண்பரான பியர்சன், ஒரு ரயில் விபத்தில் மாண்டார். எல்லாரையும் ஒன்றன்பின் ஒன்றாக இழந்து இழந்து அவர் கலங்கினார்.

ஆனாலும், இந்திய நாடு விடுதலை பெற வேண்டும்; அதற்காக காந்தி பெருமான் நீண்ட ஆயுளைப் பெறவேண்டும் என்று இறை வழிபாடு செய்துவந்தார்! சாந்திநிகேதனில் காலை, மாலை இசை வழிபாடுகள் நடைபெறும் போது, இந்த வழிபாட்டையும் சேர்த்தே செய்து வந்தார். எல்லாநாடுகளிலும் இருக்கும் எல்லா நண்பர்களும் நீண்ட நாள் வாழ விரும்பி வழிபாடுகளைச் செய்வார்.

கவிஞர் உடல் முதுமைத் துன்பத்தால் நலிந்தது; அடிக்கடி நோய் அவரை அலைக்கழித்தது; பல நாள் படுத்த படுக்கையோடு நலிந்தார்! ஒவ்வொரு நாளும் சாந்திநிகேதன் விசுவபாரதி, ஸ்ரீநிகேதன் பணியாளர்கள் அவருடனே இருந்து தக்க உதவிகளைச் செய்து வந்தார்கள்.

மாபெரும் கவி உள்ளம் மறைந்தது

கவிஞர் தாகூர் பெருமகனுடைய எண்பதாம் ஆண்டு பிறந்த நாள்விழா 1941-ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாக் கூட்டத்திற்கு தாகூர் சென்றார். அந்தக் கூட்டத்தில் அவரால் பேச முடியவில்லை.