பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்ஒவ்வொரு துறையிலும் தோன்றி, அவரவர் சான்றாண்மைகளை நிலைநாட்டுவது தான் இந்தியா புகழ் பெறக் காரணம்,

வெறும் இயற்கைச் செல்வங்களின் பெருமைகளால் மட்டுமே ஒரு நாட்டின் சான்றாண்மையை நிலை நாட்டி உலகின் முன் புகழ்பெற இயலாது. இந்த மண்ணிலே தோன்றி, அந்த மண்ணிற்காக அரும்பெரும் தியாகத்தைச்செய்து, அரிய பணிகள் பலவாற்றி, தன்நலம் மறந்து பொதுநலம் பேணி, தனது நாட்டு மக்களுக்காக உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்து ஒவ்வொரு துறையிலும் ஈந்து யார்யார் புகழ் பெறுகிறார்களோ. அவர்களால் தான் ஒரு நாடு வானளாவிய புகழையும், வல்லமையையும் பெற முடியும்.

இந்த அளவுகோல் படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறையில் நாம் நோக்கும் போது, கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் இலக்கியத்துறையிலே, ஈடில்லாப் புகழ்பெற்று, இந்திய நாட்டுக்கு உலக அரங்கில் பெரும் பெருமையை நிலை நாட்டியவர்.

அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், அரசியல், புரட்சி போன்ற பல துறைகளிலே பெரும் பெரும் அறிவாளர்களை ஈன்றளித்துள்ள மாநிலம், வங்காள மாநிலமாகும்! குறிப்பாகக் கூறுவதானால், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அரவிந்த கோஷ், சுபாஷ் சந்திர போஸ், ஜகதீச சந்திர போஸ், சரத் சந்திர போஸ், பங்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திர நாத் தாகூர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

வங்கம் என்றால், பண்டைய ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று, பதினெட்டு மொழிகளிலே ஒன்று; மரக்கலம், வளைவு என்றும் மேலும் பல பொருள்கள் உள்ளன. வங்க நாட்டிலே தோன்றிய