பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



இமயமலைச் சாரலுக்கு அவர் சென்று நான்கு மாதங்கள் தங்கியிருந்ததால் ஏற்பட்ட மற்றோர் நன்மை ரவீந்திரருக்கு உண்மையான கல்வி அங்கேதான் தொடங்கியது எனலாம். தேவேந்திர நாத் தாகூர் அங்கே தனது மகனுக்கு இங்கிலீஷ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் போதித்தார். அதேநேரத்தில் அவர் தனியாகவும் படித்துக் கொள்ளக் கூடிய திறனையும் உருவாக்கினார்.


கவிகாளிதாஸை படித்தார்

வட நாட்டிலே மிகப் பெரும் புகழ் பெற்ற மகாகவி காளிதாசர் எழுதிய காவியங்களைத் திரும்பத் திரும்பப் படித்து. அக் காவியச் சுவைகளிலே தனது மனத்தைப் பறிகொடுத்தார். ஓய்வு கிடைக்கும் நேரத்திலே எல்லாம் காளிதாசரின் இயற்கைக் காட்சி வருணனைகளை ஆழ்ந்து ஊடுருவிப் படித்தார்! அவ்வாறு அவர் கற்ற இயற்கை வருணனைகளில் மேலும் ஊக்கம் பெறும் எண்ணத்தில் இமயமலைக் காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வார்! குறிப்பாக, காளிதாசர் எழுதிய மேக தூது’ எனும் இலக்கிய நூலைத் திரும்பத் திரும்பப் படித்தார். அதன் சொற்சுவை அவருக்கோர் ஆசானாகவே அமைந்து விட்டது.

தந்தை மகற்காற்றும் நன்றி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கேற்ப, ஒவ்வொரு நாள் இரவு வந்ததும், தேவேந்திர நாத் தனது அருமை மகனை அருகே அமர வைத்து வானவியல் தத்துவங்களைக் கற்பிப்பார். அதுவும் அவர்கள் தங்கியிருந்த இடம் இமயமலை அடிவாரமல்லவா?

வான மண்டலத்தின் கோள்களைப் பற்றி அவர் தந்தை விளக்குவார்; அவற்றின் இயக்கங்களை விவரிப்பார்.