பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்


மரணத்துக்கு அவர் மதிப்பு தரவில்லை! ஆனால், அவரது அன்னை உடல் வீட்டைவிட்டு தகனத்துக்காக வெளியே வந்தபோது, தனது தாயின் முகம் கண்டு கதறி விட்டார்! கண்ணீர் சிந்தினார்! மீளாத்துயருற்றார்!

தாய்க்குப் பிறகு ரவீந்திரருடைய அக்காள், அண்ணி, அண்ணன்மார்கள், அப்பா உட்பட பலர் அவருக்கு ஆறுதல் கூறியும் கூட, அவரது துன்பத்தை எவரும் தணிக்க முடியாததாக இருந்தது. அதே நேரத்தில் அவர் கடைசிப் பையனல்லவா? அதனால் எல்லாரும் அவரைப் பரிவுடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தார்கள். ஜோதிரீந்தரரின் மனைவி தான் ரவீந்திரரை மிகப் பாசமாக தனது பிள்ளையைப் போல வளர்த்து வந்தார். அதனால் அவர் தனது அண்ணியின் கடைசி நாள் வரை அவரது பாசத்தை மறவாமல் நன்றி காட்டிவந்தார்.

ரவீந்திரர் எவ்வாறு தனது தாயின் மரணத்தைக் கண்டாரோ, அந்த நிலை அவரது பிள்ளைகளுக்கும் வந்து விட்டது. ரவீந்திரரின் அருமை மனைவி மிருணாளினி மரணப் படுக்கையிலே வேதனையுற்றபோது, தனது இரண்டாம் மகனான சமீந்திர நாதனைத் தன் தாயருகே இருக்கவிடவில்லை அவர். மரணத்தின் வேதனையை தமது மக்கள் காணக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்தார். ஆனால்,துன்பங்கள் அடுக்கடுக்காய்த் தொடர் கதையாயின.

சத்யேந்திர நாத் தாகூர், 1878ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். லண்டன் மாநகரில் இங்கிலீஷ் இலக்கியங்களைக் கற்றிட ரவீந்திரா், தனது அண்ணனுடன் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில் அவர் சேர்ந்தபோது, அப் பள்ளி மாணவர்கள் அவருடன் அன்பாகப் பழகினார்கள்.