பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

41


சட்டர்ஜி அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்! பிறகு திருமண மண்டபமே அதிர கையொலிகள் எழுந்தன!

இதுபோன்ற சான்றாண்மை மனம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களிடம் இன்றாவது இருக்கின்றதா? “தந்தை பெரியார் சொல்வதைப் போல மூன்று புலமையாளர்கள் கூடினால் போலீஸ் லாரிதான் வரும்”

காண்பனவெல்லாம்; கவின் மிகு காட்சியே!

ஒரு நாள் காலையில் கல்கத்தா நகரில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தார் ரவீந்திரர். அப்போது சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. இரண்டு மரங்களுக்கு இடையில் கதிரவன் ஒளிக்கதிர்கள் பரவி ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்ததைத் தாகூர் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே நின்றார். அப்போத அந்தக்காட்சி அவரது சிந்தனையிலே ஒரு புதிய மாற்றத்தைப் புகுத்திக் கொண்டிருந்தது.

அன்றுவரையில் அவரது கண்கள் உலகை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், அப்போது பார்த்த பார்வையில் அவருடைய உள்ளமும். உயிரும் ஒன்றி எதையோ நோக்குவதாகவும் உணர்ந்தார்.

அப்போது வீதியிலே இரண்டு பேர் கை கோத்துச் சிரித்து மகிழ்ந்து செல்லும் காட்சியில் புதிய ஓர் இன்பம் பூத்து உலவுவதையும் அறிந்தார்.

ஒரு பசு தனது இளங்கன்றுடன் தலையை ஆட்டியாட்டிச் சென்றது. ஒருதாய் தனது குழந்தையை அணைத்துக் கொண்டு நடந்தது போன்றவை அழியாக் காவியமாக அவருக்குத் தெரிந்தன.