பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

43



சத்யேந்திர நாதத்தின் குடும்பம் இருந்தது. ரவீந்திரர் அந்த அண்ணன் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.

அரபிக்கடலின் அகன்ற தோற்றமும், அதன் அழகும் ரவீந்திரர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. அக் கடலோரத்தின் அலைகளது ஆடலும் அதன் ஒசைகளும், இவற்றிடையே அவர் இரவின் நிலவொளியில் நடந்து செல்வதும் அவருக்குப் பேரின்பமாக இருந்தது.

அந்தக் கடலோரக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டே ஒரு நாடகத்தை எழுதினார்! அதற்கு ‘துறவி’ என்ற பெயரைச் சூட்டினார்! அந்த நாடகம் இன்றும் இலக்கிய உலகிலே ஒரு விண்மீனாக விளங்கி, மக்கள் பாராட்டைப் பெற்று வருகின்றது.

உலகத்தின் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்ட ஒரு துறவி. அவர் நீண்ட நாட்களாகத் துறவு மனப்பான்மையில் பழுத்த ஞானி! எல்லாவற்றையும் அறவே துறந்துவிட்ட சந்நியாசி அவர். அவருக்கு தன் துறவு மீதிருந்த அசைக்க முடியாத மன உறுதியால், இனி ஊருக்குள்ளே செல்லலாம், மக்களது ஆசாபாசங்கள் நம்மை எந்த விதத்திலும் ஊனப்படுத்தாது என்ற மன உறுதியோடு ஓர் ஊருக்குள்ளே வந்தார்.

ஒரு இடத்தில் வசந்தி என்ற ஒரு பெண் குழந்தை யாரும் அற்ற அநாதையாகத் துறவி பக்கத்திலே வந்து உட்கார்ந்தது. துறவிதானே அவர், அதனால் மனதிலே எந்தச் சலனமும் இல்லாமல் அக்குழந்தைக்கு தன் பக்கத்திலே அமர இடம் கொடுத்தார்.