பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


மாமனால் மாமியாரிடமும், மற்றுமுள்ள சுற்றத்தார்களிடமும் உண்மையான பாச உணர்வோடு வாழ்ந்தார்.

கவிஞரது துணைவியார் எந்தவிதமான குடும்பப் பாரத்தையோ, கஷ்ட நஷ்டங்களையோ, சிக்கல்களையோ கணவரிடம் விடாமல் எல்லாவற்றையும் தானே சுமந்து கொண்டு வாழ்ந்தார். அதனால் தான், கவிஞர் தாகூர் எந்தவிதமான கவலைகளும் இல்லாமல் அவரது சிந்தனைகளைச் செம்மையாக ஓட வைத்தார்! அந்த ஓட்டம் உலகம் போற்றும் பல நூல்களை உருவாக்கியது.

கவிஞர் தாகூர் கலைத் தொண்டுகளுக்காக அடிக்கடி சாந்தி நிகேதன் செல்வார். அங்கே நாள் கணக்கில் தங்கி நூல்களை எழுதி முடித்துவிட்ட பிறகே கல்கத்தா திரும்புவார். கவிஞர், ஆண் மக்கள் இருவருக்கும், பெண் மக்கள் மூவருக்கும் அரிய தந்தையாக விளங்கினார்.

கவிஞர் தாகூர் தனது தந்தையாரைப் போலவே ஆடம்பரத்தை வெறுத்தார். பகட்டு, படாடோபம், வெற்று விளம்பரம், இலக்கியக் கோஷ்டி, அரசியல் கோஷ்டி தன்னைப் புடை சூழாமல், ஜால்ரா தட்டிகளையும், முகஸ்துதியாளர்களையும் அண்ட விடாமல் செம்மையாக வாழ்ந்து காட்டினார்.

தூய்மை என்பதும், அழகு என்பதுமே அவருடைய உள்ளத்தை ஈர்த்தன! அதற்காக அவர் ஆடம்பரத்தை நாடிய வரல்லா்! தமது குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் துணி மணிகள் வாங்கும் நிலையேற்படும்போது, எளிமையாகவும், சிக்கனமாகவும் இருப்பார்! அதிகச் செலவுகளை யார் செய்தாலும் தடுப்பார்.