பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

59



பணக்காரக் குடும்பத்திலே பிறந்து வளர்ந்த மாதரசியான மிருணாளினி, தனது கணவர் என்ன சொல்கிறாரோ, எப்படிச் செயல்படுகின்றாரோ அவற்றையெல்லாம் வரும்பொருள் உரைக்கும் மந்திரியைப் போல, வருமுன் உணர்ந்து நடந்து கொள்ளும் அருங்குணவதியாக வாழ்ந்தார். பெற்றோர் அணிவித்த நகைகளை எல்லாம் பெட்டிக்குள் வைத்துவிட்டு, ஓர் ஏழைப் பெண்போலவே அவர் விளங்கினார். அந்த அரிய பண்பை அவரது வீட்டார் அனைவரும் பாராட்டி மகிழ்வார்கள்.

தாகூர், தேவேந்திர நாத் குடும்பத்தின் பதினான்காவது, கடைசிப் பிள்ளை அல்லவா? அதனால், கவிஞரது மனைவியார் எல்லா மருமகள்களையும் விட மிக இளைய மருமகளாகவும், அழகாகவும், எளிய கோலமாகவும் இருந்ததைக் கண்ட குடும்பத்தினர் எல்லாருமே அந்த அம்மையாரிடம் தனி அன்பு, மரியாதை, மதிப்பு வைத்தே பழகி வந்தார்கள்.

அத்தகைய மதிப்பு வைத்திருக்கும் அவர்கள் எதிரே பணிவாகவும், அடக்கத்தோடும், செல்வந்தன் மகள் என்ற செருக்கற்றும், நகையலங்காரம், ஏதுமின்றி பொறுமையாகவும், பெருமையாகவும் அந்த அம்மையார் நடந்து கொண்டது கவிஞருக்கு மிகப் பெரிய மரியாதையை அந்தக் குடும்பத்தில் பெற்றுத் தந்தது.

கவிஞர் தாகூருக்கு பிறந்த நாள் விழா வந்தது. அப்போது கணவருக்குத் தங்கத்தால் பொத்தான்கள் செய்து கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார் கவிஞர் மனைவி. அதற்குத் தாகூர் ‘நான் என்ன பெண்ணா? ஆண்கள் நகை அணிந்து கொள்வதா! என்று பேசி, அந்தப் பொத்தான்களை அணிந்து-