பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


உரையாற்றினார்! ஆங்கிலத்திலே வழக்கமக உரையாற்றுபவர்களுக்கும் தாய்மொழிப் பற்று வரவேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு முன்னோடியாக விளங்கினார்.

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு, டாக்டர் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு 1915-ஆம் ஆண்டில் ‘சர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியதால், டாக்டர் கவிஞர் சர் ரவீந்திர நாத் தாகூர் என்று அவர் மக்களால் அழைக்கப்பட்டார்.

இந்தப் பெரும் பட்டங்கள் எல்லாவற்றையும் மீறிய புகழோடு, உலகப் புகழ்பெற்ற முதல் இந்திய மகாகவியாக தாகூர் விளங்கினார். உலக மக்கள் அவருடைய பாடல்களையும், எழுத்துக்களையும் படிப்பதுடன் மட்டுமல்லாமல் அதை ஆராய்ச்சிகளும் செய்து வந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அவரது கீதாஞ்சலி நூல் தான். அதே நேரத்தில் ‘கீதாஞ்சலி’ நூல் வெளிவரக் காரணர்கள் யார் யாரோ அவர்களை எல்லாம் கவிஞர் மறக்கவில்லை. அந்த மொழி பெயர்ப்பு நூலின் உரிமையுரையில், கவிஞர் தாகூர் தனது நண்பரான ரொதென்ஸ்டினுக்குக் காணிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கவிஞர் தாகூர், சிறுவயதிலிருந்தே இங்கிலீஷ் மொழியை முழுமையாகக் கற்கவில்லை. ஆங்கிலம் கற்பது அவருக்கு வேம்பு போல் கசந்தது; வெறுப்பும் ஏற்பட்டது. பிற்காலத்தில், அவரது கவிதைக்கும், பாடலுக்கும், கதைகளுக்கும் ஆங்கில மக்களிடையே நல்ல செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த போது, இங்கிலீஷ் மொழியின் பயனை உணர்ந்து தன்னுடைய சொந்த முயற்சியால் அதைக் கற்றுக் கொண்டார். வங்காள மொழியிலே இருந்து எந்தக் கருத்தையும், செம்மையான