பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

91


படி கல்வி முறையை அமுலாக்கினார். ஆனால், முதலில் இருந்தே அவருடைய மனத்தில் தேர்வு முறையை எதிர்த்துப் போராட்டம் நடந்து வந்தது.

சில ஆண்டுகள் நடைமுறையில், அதன் தீமைகளை உணர்ந்தபின்பு, மெட்ரிகுலேஷன் தேர்வோடு சாந்திநிகேதன் மாணவர்களுக்குத் தொடர்பே கூடாது என்ற முடிவிலே கவிஞர் நின்றார். அப்போது மற்றவர்கள் கவிஞர் எண்ணத்திற்கு இணங்கவில்லை. மீண்டும் பொறுத்தார்.

கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் 1920-ஆம் ஆண்டு மீண்டும் ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் சென்றார். கப்பல் ஏறிய பிறகுதான். சாந்திநிகேதன் ஆசிரியர்கள் கவிஞருடைய உணர்ச்சியை, எண்ணத்தை, உள்ளக் கருத்தை உணர்ந்தார்கள். அவர் முடிவுக்கேற்ற படியே நடத்த முன்வந்தார்கள்.

கப்பலில் பயணம்சென்றுகொண்டிருந்த கவிஞர் தாகூருக்கு அஞ்சல் வாயிலாக அச்செய்தியை சாந்திநிகேதன் பொறுப்பாளர்கள் அனுப்பியபோது, அதைப் பெற்ற கவிஞர் பெருமான் தாகூர் சொல்ல முடியாத மகிழ்ச்சியைப் பெற்றார். சாந்திநிகேதனின் கல்வி முறையிலே இருந்த பெருங்குறை அகன்று விட்டதாக அகமகிழ்ந்தார்.