பக்கம்:கவி பாடலாம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கவி பாடலாம்

என்ற பொருளையுடையது. யாப்பு-கட்டப்பட்டது (Com position). உலகவழக்கில், ‘பாட்டுக் கட்டினான்’ என்று பேசுவதைக் காண்கிறோம். ‘கழல்யாப்புக் காரிகை நீர்த்து: என்ற குறளில் யாப்பு என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளில் வந்ததைக் காணலாம்.

இப்போது நமக்குத் தெரிந்த இலக்கண நூல்களில் மிகப் பழமையானது அகத்திய முனிவர் இயற்றிய அகத்தியம். அது மூன்று தமிழுக்கும் உரிய இலக்கணத்தைக் கூறும் நூல். இயற்றமிழ் இலக்கணப் பகுதியில் செய்யுளின் இலக்கணமும் இருந்தது. அது மிக விரிவாக இருந்தது என்று தெரிய வருகிறது. தொல்காப்பிய உரையில் பேராசிரியர், ‘செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்து கிடந்ததனை (மரபியல், 95, உரை) என்று எழுதுகிறார். இப்போது அகத்தியம் கிடைக்கவில்லையாதலின், அகத்தியர் செய்யுளின் இலக்கணத்தை இன்னவாறு வரையறுத்தார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.

அகத்தியத்துக்கு அடுத்தபடி பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். அதில் பொருளதிகாரத்தில் ஒன்பது இயல்கள் இருக்கின்றன. எட்டாவது இயல் செய்யுள் இயல். அதில் 243 சூத்திரங்கள் உள்ளன. அதைத் தனியே ஒரதிகாரமாகக் கொள்ளக் கூடாது; பொருளில் அடங்கியதே என்று கூறுவார் பேராசிரியர். தொல்காப்பியச் செய்யுளியல் உரையில், மற்று இதனை யாப்பதிகாரம் என வேறு ஒர் அதிகாரமாக்கி உரைப்பாரும் உளர். அங்ஙனம் கூறின் வழக்கதிகாரம் எனவும் வேறு வேண்டுமென மறுக்க’ என்று அவர் எழுதியுள்ளார்.

தொல்காப்பியச் செய்யுளியலில் செய்யுளுக்கு உறுப்புக்கள் என்று முப்பத்து நான்கைக்கூறுகிறார் ஆசிரியர் தொல்காப்பியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/107&oldid=655694" இலிருந்து மீள்விக்கப்பட்டது