பக்கம்:கவி பாடலாம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கவி பாடலாம்

ஆகவே, கவி பாடிப் பெயர் பெறுவது என்பது எல்லோருக்கும் நிறைவேறும் காரியம் அல்லவானாலும், கவி பாட முயற்சி பண்ணுவதற்கு யாவருக்குமே உரிமை உண்டு. வெற்றியோ, தோல்வியோ அவரவர்களின் திறமையைப் பொறுத்தது.

‘'எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்’ என்று மேல்நாட்டுக் கவிஞன் ஒருவன் பாடினான். அந்த ஊமைக் கவிகளைக் கண்டு பிடித்துப் பாடச் சொல்வதற்கு யாருக்குத் தெரிகிறது?

இந்தக் காலத்தில் கவிதை எழுதுவதற்கு எல்லோருக் கும் ஆசை இருக்கிறது. பள்ளிக்கூடப் பிள்ளைகள்கூடக் கவி எழுதிப் பெயர் வாங்க வேண்டும் என்ற ஆவலுடைய வர்களாக இருக்கிறார்கள். முயற்சியும் செய்கிறார்கள். இப்படிச் செய்கிறவர்களில் இரண்டு வகையினரைப் பார்க்கிறோம். ஒரு சாரார் ஏதோ பெரிய கருத்தை அற்புதமாகச் சொல்லிவிட்டதாக எண்ணி வசனமும் அல்லாமல் பாட்டும் அல்லாமல் சில கவிதை'களை எழுதுகிறார்கள். அவர்களே அதைப் படித்தால்தான் அது பாட்டென்று தோன்றும். வேறு ஒரு சாரார் கவிதையில் வரும் எதுகை, மோனை என்னும் இரண்டை மாத்திரம், தெரிந்து கொண்டிருப்பார்கள். அவற்றை அமைத்துப் பாடுவார்கள். ஆனால் அது கவிதையாக இராது.

கவிதை கவிதையாவது அதில் உள்ள பொருள் சிறப்பினாலேதான். பொருளின் சிறப்போடு அதைச் சொல்லியிருக்கும் பாணியிலும் அழகு இருக்க வேண்டும். உரைநடையிலும் அதே கருத்தை அதே அழகோடு சொல்லிவிடலாம். ஆனால் அது கவிதையாகாது; உரைச் செய்யுள் அல்லது வசன கவிதை என்று சொல்லிக் கொள்ளலாம். கவிதைக்குத் தனி உருவம் உண்டு. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/15&oldid=655744" இலிருந்து மீள்விக்கப்பட்டது