பக்கம்:கவி பாடலாம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஒத்தாழிசைக் கலிப்பாக்கள்

பாக்கள் நான்கில் மூன்றாவது கலிப்பா. அதற்குரிய ஓசை துள்ளலோசை. ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கவிப்பா, வெண் கலிப்பா என்ற மூன்று பெரும் பிரிவை உடையது அது. ஒத்தாழிசைக் கலிப்பாவின் வகை: (1) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, (2) அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, (3) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்னும் மூன்று. கொச்சகக் கலிப்பா (1) தரவு கொச்சகக் கலிப்பா, (2) தரவினைக் கொச்சகக் கலிப்பா, (3) சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, (4) பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, (5) மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்று ஐந்து வகைப்படும். வெண் கலிப்பாவில் வேறு வகையில்லை.

கலிப்பாவிற்குரிய உறுப்புக்கள் சில உண்டு. தரவு, - தாழிசை, அம்போதரங்கம், வண்ணகம், தனிச்சொல், சுரிதகம் என்பவை அவை. இந்த உறுப்புக்கள் யாவும் வரும் கலிப்பா வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.

ஒத்தாழிசைக் கலிப்பாவில் ஒன்றாகிய நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கும் வரும். இவற்றோடு அம்போ தரங்கம் சேர்ந்து வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. அவற்றோடு வண்ணக உறுப்பும் சேர்ந்து வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாகும்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லும் சுரிதகமும் முறையே பெற்று வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/168&oldid=655764" இலிருந்து மீள்விக்கப்பட்டது