பக்கம்:கவி பாடலாம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தாழிசைக்கலிப்பாக்கள் 173

உறுப்புக்குப் பெயர். அதை அராகம், அடுக்கியல் முடுகியல், போக்கியல் என்ற பெயர்களாலும் வழங்குவர். பெரும்பாலும் விளச்சீர்களே விரவி வருவது அது. கருவிளச்சீர்களே மிகுதியாக வரும். அப்படி வருவதனால் முடுகும் ஓசை உண்டாகிறது. இந்த வண்ணக உறுப்பாகிய அராகத்தைத் தாழிசைக்கும், அம்போதரங்கத்துக்கும் இடையிலே பெற்று வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா நான்கு உறுப்புக்களை உடையது. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவோ ஐந்து உறுப்புகளை உடையது. வண்ணக ஒத்தாழிசைக் கலிப் பாவுக்கு ஆறு உறுப்புக்கள் இருக்கும். அவையாவன, தரவு, தாழிசை, வண்ணகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிலும் தரவு ஆறடியாகவே வரும்.

தனதன தனதன தனதன தனதன என்பது போன்ற ஒசையுடன் வேகமாக நடத்தலின் அராக உறுப்புக்கு முடுகியல் என்று பெயர் வந்தது. இப்படிச் சந்தம் அமைந்த வெண்பாவை முடுகு வெண்பா என்றும், முன்னும் பின்னும் முடுகு அமைந்ததை முன் முடுகு வெண்பா, பின் முடுகு வெண்பா என்றும் பிற்காலத்தார் கூறும் வழக்கு இங்கே ஒப்பு நோக்குதற்குரியது.

அராக உறுப்பு நாற்சீரடியாகிய அளவடி முதல் எல்லா அடியாலும் வரும். நான்கடி முதல் எட்டடி வரையில் அமையும். -

‘அளவடி முதலா அனைத்திலும், நான்கடி முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும்”

என்பது பழைய சூத்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/174&oldid=655771" இலிருந்து மீள்விக்கப்பட்டது