பக்கம்:கவி பாடலாம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கவி பாடலாம்

சொல்ல இயலாது. சொல்லமைதி, பொருளமைதி, கவிதையெழில், யாப்பமைதி ஆகிய எல்லாம் சேர்ந்து அமைவதே நல்ல கவிதை. இவற்றில் கவியெழிலைத் தவிர மற்றவற்றை இத்தகையன என்று சுட்டிக் காட்டலாம்; கற்றுக் கொள்ளலாம். ஆனால் கவிதையெழில் என்பது அவரவர்களுடைய உள்ளுணர்வை ஒட்டி அமைவது. அதைப் பிரதிபை என்று கூறுவர். கருவிலே திருவுடைய வர்களே நல்ல கவிஞராகிறார்கள்.

இயல்பாகவே கவிபாடும் திருவுடையவர் பாடும் கவிதை இயல்பாக மலர்ந்த தாமரைபோல் இருக்கும். இலக்கண அறிவும் அகராதிப் பழக்கமும் உடையவர் அவற்றை மட்டும் வைத்துக் கொண்டு செய்யுள் இயற்றினால், அது நெட்டியால் செய்து வண்ணந் தீற்றிய தாமரையைப் போல இருக்கும். செயற்கைத் தாமரையில் தனித்தனியே இதழ்களைச் செய்வார்கள். பிறகு காம்பைச் செய்வார்கள். அவற்றைப் பிறகு இணைத்து வண்ணம் பூசுவார்கள், மணம் ஊட்டுவார்கள். அவ்வண்ணமே செய்யுள் கட்டுகிறவர்கள் ஒவ்வொரு சொல்லாக எடுத்து வைத்தும், மாற்றியும், எதுகைக்கு ஏற்ற சொல் என்னவென்று அகராதியைப் பார்த்துப் பொறுக்கியும் வைத்து அமைப்பார்கள். இயற்கையில் தாமரைப்பூ மலரும் போதே வண்ணம், மென்மை, வரவு, மணம் எல்லாம் ஒருசேர அமையப் பெற்று மலர்கிறது. கவிஞன் பாட்டும் அப்படியே முழுமையாகப் பிறக்கிறது.

கவி பாடுகிறவர்கள் கூடிய வரையில் சீர்களில் மொழிகள் முழுமையாகப் பொருந்தும்படி வைத்தால் அழகாக இருக்கும். சீர் பிரியும்போது மொழிகள் வெட்டுப் பட்டால் அதை வகையுளி என்று சொல்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/215&oldid=655817" இலிருந்து மீள்விக்கப்பட்டது