பக்கம்:கவி பாடலாம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

கவி பாடலாம்

‘உயிரோடியாக்கை’ என்னும் தொடரில் ‘டி’ என்பது குற்றியலுகரம் திரிந்த குற்றியலிகரம். அதற்கு அலகு இல்லை. ஆதலின்யாக்கை என்பது போலவே கருதித் தேமா என்ற வாய்பாடு கொள்ள வேண்டும்.

‘மதுரமொழி நல்லுமையாள்’ என்ற பாடலில் ‘வல்லார்க்கு அரிதே’ என்னும் இடத்தில் குற்றியலுகரம் கெடாமல் நிற்பது பிழையல்லவா?

அங்கே வேண்டுமென்று பதம் பிரித்திருக்கிறதே யன்றிப் பாட்டு ‘வல்லார்க் கரிதே’ என்றுதான் உள்ளது. இல்லையேல் தளை தவறாகி விடும்.

‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ என்ற நன்னூல் சூத்திரத்திற்கு இணங்க, உரைநடையில் குற்றியலுகரம் கெடாமல் நிற்பது பிழையா? செய்யுளில் கெடாமல் நிற்கலாமா?

பதம் பிரித்து எழுதும்போது எதிலும் பிழை இல்லை. ஆனால் செய்யுட்களில் பிரிந்து நிற்கும்போது மட்டும் ஒசை சரியாக இருந்து, சந்தி சேர்த்தால் ஓசை குறையுமாயின் அது தவறு.

குற்றியலிகரம்போல் குற்றியலுகரம் அலகிடப் பெறுவதில்லையா?

யாப்பருங்கலக் காரிகையில், சில இடங்களில் குற்றியலுகரமும் அலகிடப் பெறுவதில்லை என்று இலக்கணம் இருக்கிறது. அதற்கு வஞ்சிப் பாட்டை உரையாசிரியர் உதாரணம் காட்டுகிறார். ஆனால், வெண்பா முதலியவற்றில் அலகிடாமல் குற்றியலுகரம் வந்ததற்கு உதாரணம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/225&oldid=655828" இலிருந்து மீள்விக்கப்பட்டது