பக்கம்:கவி பாடலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கவி பாடலாம்

ஒவ்வோரடியிலும் நாலு சீர் வருவது இயல்பான அளவு. அதைச் சரியான அளவாகக் கொண்டால் அதற்குக் குறைந்த சீர்கள் உள்ள அடிகள், அதற்கு அதிகமாக சீர்கள் உள்ள அடிகள் என்று இரண்டு வேறு வகை அடிகளும் உண்டு என்பது தெரியும். அளவுக்கு மேல் வளர்ந்தவர்களை நெட்டை என்று நாம் சொல்கிறோம்; நெடில் என்றும் சொல்லலாம். நாலு சீரை உடைய அடி அளவடி அதற்கு மேல் வருபவை நெடிலடிகள். அந்த நெடிலடிகளிலும் இரண்டு வகை உண்டு. நாலுக்குமேல் ஐந்தாக வருவது நெடிலடி. அதற்கு மேல் எத்தனை சீர் வந்தாலும் அவை யாவுமே கழிநெடி லடிகள். கழி என்பது மிகுதியைக் குறிக்கும் சொல். நெடிலுக்கும் மிக்கது என்று பொருள். ஆறு சீர் அடி, கழிநெடிலடி வகையைச் சார்ந்தது. நாலு சீரடியை அளவடி என்று சொன்னால் போதும்; அளவடி என்றாலே நாலு சீரடி என்று தெரிந்து கொள்ளலாம். அப்படியே நெடிலடி என்றாலே ஐந்து சீர் என்று தெரிந்து கொள்ளலாம். நாற்சீர் அளவடி, ஐஞ்சீர் நெடிலடி என்று குறிக்க வேண்டாம். ஆனால் கழிநெடிலடிகளை அப்படியே சொன்னால் போதாது. ஆறு முதல் எத்தனை சீர் வந்தாலும் கழி நெடிலடி யாகையால், கழிநெடிலடி என்று சொன்ன அளவில் அஞ்சுக்கு மேற்பட்ட சீர் இருக்கும் என்று விளங்குமேயன்றி, இத்தனை சீர் என்று திட்டமாகத் தெரியாது. ஆகையால் கழிநெடிலடி என்று குறிக்கும் போது இத்தனை சீர் என்ற கணக்கையும் சொல்வது வழக்கம். ஆகவே ஆறு சீர் விருத்தத்தை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற நீண்ட பெயரால் குறிப்பார்கள்.

- இந்தப் பாட்டு விருத்தம்; ஆசிரியப்பாவுக்கு இனமாதலால் ஆசிரிய விருத்தம்; சீர் அளவினால் கழிநெடிலடி விருத்தம்; கணக்காகப் பார்த்தால் ஆறு சீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/31&oldid=655865" இலிருந்து மீள்விக்கப்பட்டது