உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என் கனா

ட்டென்று கண்ணை மூடிக்கொண்ட சாயங்கால வெயில். வெள்ளி நிற மேகமெல்லாம் கூடிக் குழைந்து கர்ப்ப வேதனையில் முகம் கறுத்தன. அதன் கோபத்தில் சூரியன் மறைந்து கொண்டது. தரையில் மேக நிழல்களாகக் கனத்த இருட்டு!

எனக்கு ஒரே புழுக்கம். நசநசப்பு. மூச்சே போகவில்லை. மயக்கப் படபடப்பில் மனத் திணறல். ஆனாலும், மனசின் ஒரு மூலையில் முகம் தெரியாத மகிழ்ச்சி! ‘எனக்குப் பிரியமான மழைக் காதலன் வரப்போறானே..?’

ஒரு மாயத்தோழி பிசாசாக வந்து மோதினாள், “அடியே ஒன்னோட ஆள் ஆசை வெறியோட வாராண்டி” என்று கேலியும் கிண்டலுமாக உடம்பெல்லாம் கிச்சலம் காட்டினாள்! வெட்கத் திணறலோடு தவித்த என் திரேகத்துக்குள் அவளது விளையாட்டுச் சேட்டைகள்! என் பச்சையாடைக்குள் புகுந்து கொண்டு செய்த அலைக்கழிப்புகள். அவளது மூர்க்க விளையாட்டில் எனது மஞ்சள் மேலாடைகள் நழுவி உதிர்ந்தன! பரவசம் தாளாமல் தோழியின் குதூகலத்தில் கூத் தாடினேன்!

“ச்சீ-போடி” என்ற என் போலிச் சிணுங்கல், ‘ஊய்ய். ஊய்ய்..’ யென்று பேரோசைகளாகச் சீறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/101&oldid=1810464" இலிருந்து மீள்விக்கப்பட்டது