உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

காகிதம்


“ஏலேய் நாங்குடுத்த மாடு - கன்னு, காடு - கரை நல்லா இருக்கணும்னா... மழைத் தண்ணி வேணும்னா.. மரம், கன்னுக இருக்கணும். மாரித்தாய்க்குப் பிடிச்ச மரம்டா இது...மாரித்தாய்ன்னா யாரு..? மழைதாண்டா...”

- கோபமும் கொதிப்புமாக மல்லுக்கு நின்று ஜெயித்துவிட்டார். நான் உயிர் தப்பிவிட்டேன்.

மைனாக்கள், கிளிகள், காகங்களுக்கு நான் தான் புகலிடம், நானே அதன் உலகம். நிழலும் உணவும் தருகிற உலகம். மைனாக்களின் பொய்ச்சண்டைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்ல கூத்து மாதிரியுமிருக்கும். அதன் ‘கீச்சுமூச்சு’ என்ற கத்தல்... நல்ல சங்கீதம். கேட்கச் சுகமாக இருக்கும்.

என் காலடியில் குழந்தைகள் விளையாடும். கிழடுகட்டைகள் காலை நீட்டி உட்கார்ந்து, ஊர்ப் புறணிகள் பேசுவர், உழைத்துக் களைத்தவர்கள் துண்டை விரித்துக் குறட்டைப் போடுவார்கள்.

ஊரில் யாருக்காச்சும் ஜன்னிக் கோளாறு என்றால், என் பட்டைகளை உரித்துப் புகை போடுவார்கள். குடல் புண் என்றால்... என் கொழுந்துகளை அரைத்துக் குடிப்பார்கள். படையே நடுங்கும் பாம்பைக் கண்டு.. அந்தப் பாம்பின் விஷம் என்னைக் கண்டால் பயந்தோடும். வைசூரி, அம்மைக்கட்டு, பல்வலி என்றால்... நான்தான் மருந்து.

இதில் எனக்கு ஏகப்பெருமை. மாரியாத்தா கோயில் திருவிழா என்றால். எனக்கு ஏகப்பட்ட மரியாதை.மஞ்சள், குங்குமம் வைத்து என்னைக் கும்பிடுவார்கள். ஆடு மேய்ப்பவர்களுக்கு நான்தான் குலதெய்வம் மாதிரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/109&oldid=1810476" இலிருந்து மீள்விக்கப்பட்டது